தேடுதல்

Vatican News
வத்திக்கானில் தவக்கால உரையைக் கேட்கும் திருத்தந்தை, ஏனைய பொறுப்பாளர்கள் வத்திக்கானில் தவக்கால உரையைக் கேட்கும் திருத்தந்தை, ஏனைய பொறுப்பாளர்கள்  (ANSA)

இதயங்கள், தற்பெருமையிலிருந்து விடுதலைபெற தவக்காலம்...

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 29ம் தேதி மாலை ஐந்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், ஒப்புரவு திருவழிபாட்டை தலைமையேற்று நடத்துவார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கவர்ச்சியூட்டும் வீண்ஆடம்பரங்களைத் தவிர்த்து வாழ்வதற்கு, தவக்காலம் அருளை வழங்குகின்றது என்று, தவக்காலத்தின் முக்கியத்துவம் பற்றி, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

“வெளிப்புறத் தோற்றங்கள், பணம், செய்யும் தொழில் மற்றும், பொழுதுபோக்குகள், நம்மை மயக்க வைக்கின்ற எச்சரிக்கைகள்; இவை நம் இலக்கை அடையவிடாமல், திசை திருப்புகின்றன; வீண்பெருமைகளிலிருந்து நம் இதயங்களை விடுவிப்பதற்குத் தேவையான அருளை, தவக்காலம் வழங்குகின்றது” என்ற சொற்கள், மார்ச் 23, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில் இடம்பெற்றிருந்தன.

மேலும், மார்ச் 29, வருகிற வெள்ளிக்கிழமை மாலை ஐந்து மணிக்கு, வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில், “நானும் தீர்ப்பு அளிக்கவில்லை” என்ற தலைப்பில், ஒப்புரவு திருவழிபாட்டை தலைமையேற்று நடத்துவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இரக்கத்தின் யூபிலி ஆண்டின் நிறைவாக, 2016ம் ஆண்டு நவம்பரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட திருத்தூது கடிதத்தில், ஒப்புரவு அருளடையாளம், கிறிஸ்தவ வாழ்வின் மையமாக அமைய வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு உதவியாக, தவக்காலத்தில், ‘ஆண்டவரோடு 24 மணி நேரங்கள்’ என்ற செப முயற்சி பற்றியும், அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

23 March 2019, 15:26