தேடுதல்

கஜகஸ்தான் ஆயர்கள், திருத்தந்தையுடன் கஜகஸ்தான் ஆயர்கள், திருத்தந்தையுடன் 

நன்றாக செபிப்பதற்கு தேவை, குழந்தையின் இதயம்

மெக்சிகோ ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Rogelio Cabrera Lopez அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவிடம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையில் சிறாரைப் பாதுகாப்பது குறித்து பேசினார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

நம் செபம் நன்றாக அமைவதற்குத் தேவையான எது என்பது பற்றி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 01, இவ்வெள்ளியன்று தன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

“நன்றாகச் செபிப்பதற்கு, குழந்தையின் இதயம் நமக்குத் தேவைப்படுகின்றது” என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டரில், இவ்வெள்ளியன்று இடம்பெற்றிருந்தன.

மேலும், மெக்சிகோ ஆயர் பேரவைத் தலைவரான, Monterrey பேராயர் Rogelio Cabrera Lopez அவர்கள் தலைமையிலான பிரதிநிதிகள் குழு ஒன்றையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, பேராயர் Rogelio Cabrera Lopez அவர்கள், திருஅவையில் சிறாரைப் பாதுகாப்பது குறித்து பேசப்பட்டதாக, அறிவித்தார்.

இன்னும், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் கத்தோலிக்க ஆயர்களை, அத் லிமினா சந்திப்பையொட்டி, மார்ச் 01, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மத்திய ஆசியாவில் அமைந்துள்ள, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள், முன்னாள் சோவியத் யூனியனைச் சேர்ந்தவை. பெயர்களை வைத்து, ‘தான்ஸ்’ நாடுகள் என அழைக்கப்படும் இந்நாடுகள், மேற்கே காஸ்பியன் கடல், கிழக்கே சீனா, தெற்கே ஆப்கானிஸ்தான், வடக்கே இரஷ்யாவை எல்லைகளாகக் கொண்டுள்ளன. இந்த ஐந்து குடியரசுகளில் ஏறத்தாழ ஏழு கோடிப் பேர் உள்ளனர்.   

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 March 2019, 15:09