வத்திக்கானில் நடைபெற்றுவரும் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்வோருடன் திருத்தந்தை வத்திக்கானில் நடைபெற்றுவரும் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்வோருடன் திருத்தந்தை 

நீடித்த நிலையான வளர்ச்சி, நன்னெறி விழுமியங்களில் வேரூன்றியுள்ளது

ஐ.நா.வின் 2030ம் ஆண்டின் வளர்ச்சித்திட்ட இலக்குகள் ஊக்குவிக்கப்பட்டு, அமல்படுத்தப்படுவதற்கு நம்மை அர்ப்பணிக்க வேண்டும். இதற்கு, நம் ஆழமான சமய மற்றும் அறநெறி விழுமியங்கள் உதவும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

‘மதங்களும், நீடித்த நிலையான வளர்ச்சித் திட்டங்களும்’ என்ற தலைப்பில், வத்திக்கானில் நடைபெற்றுவரும் பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்கின்ற, ஏறக்குறைய நானூறு பிரதிநிதிகளை, மார்ச் 08, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை நடத்தும் இந்த பன்னாட்டு கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளிடம், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், இலக்குகள், பூர்வீக இன மக்கள் போன்ற தலைப்புக்களில் தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நீடித்த நிலையான வளர்ச்சி பற்றிய கலந்துரையாடலில், ஏழைகள், புலம்பெயர்ந்தோர், பழங்குடிகள், இளையோர் உட்பட, அனைவரின் குரல்களும் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டியதன் முக்கியத்துவம் உணரப்பட வேண்டுமென்று, திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

நம் பூமிக்கோளத்தின் வருங்காலத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்த உண்மையான மற்றும் ஒருவரையொருவர் மதிக்கின்ற கலந்துரையாடலில் ஈடுபடுகையில், மதங்கள், தங்களின் சிறந்த மரபுகளின் அரும்பெரும் செல்வங்களைத் திறந்து வைக்கவேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

மக்கள், பூமிக்கோளம், வளமை, அமைதி, பங்காண்மை ஆகிய ஐந்து கூறுகள் வழியாக, 2030ம் ஆண்டின் வளர்ச்சித் திட்ட இலக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்படுவதற்கு,  ஐக்கிய நாடுகள் நிறுவனம் பரிந்துரைத்துள்ளதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, இந்தக் கருத்தரங்கு, இந்த ஐந்து கூறுகளிலும் கவனம் செலுத்தி வருவதைப் பாராட்டினார்.

அமைதியின் புதிய பெயராகிய, ஒருங்கிணைந்த உண்மையான வளர்ச்சிப் பாதையில் மதங்கள் உதவ முடியும் என்று உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கருத்தரங்கில் கலந்துகொள்வோர், தற்போதைய சூழல்கள் முன்வைக்கும் சவால்களுக்கு எதிராய் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதை ஊக்கப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 March 2019, 15:17