தேடுதல்

Vatican News
செக் மற்றும் சுலோவாக்கிய குடியரசுகளின் நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் செக் மற்றும் சுலோவாக்கிய குடியரசுகளின் நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ்   (ANSA)

புனித சிரிலின் போதனை, செக்,சுலோவாக் மக்களுக்கு இன்றும்.........

புனித சிரில் அவர்கள் இறந்ததன் 1150ம் ஆண்டு நிறைவையொட்டி, செக் மற்றும் சுலோவாக் குடியரசுகளின் நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகளை, மார்ச் 22, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

அரசியல்வாதிகள், உரையாடல் வழியே மக்களுக்கிடையே உறவுகளைப் பேணி வளர்க்க வேண்டும் என்று, இரு ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்றப் பிரதிநிதிகளிடம் இவ்வெள்ளியன்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஸ்லாவியர்களின் திருத்தூதரான புனித சிரில் அவர்கள் இறந்ததன் 1150ம் ஆண்டு நிறைவையொட்டி, மார்ச் 22, இவ்வெள்ளி காலையில், திருப்பீடத்தில் தன்னைச் சந்தித்த, செக் மற்றும் சுலோவாக்கிய குடியரசுகளின் நாடாளுமன்றங்களின் பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

விருந்தோம்பல் மற்றும் ஒருமைப்பாட்டுணர்வு கொண்ட சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு உதவியாக, இந்த நாடுகளின் பிரதிநிதிகள், தங்களின் கிறிஸ்தவ வேர்கள் பற்றி மறுஆய்வு செய்யுமாறு திருத்தந்தை பரிந்துரைத்தார்.

நற்செய்திக்கும், இந்நாடுகளின் கலாச்சாரத் தனித்துவத்திற்கும் இடையேயுள்ள ஆழமான தொடர்பு குறித்து மீண்டும் கண்டுணர்ந்து, ஒருவர் ஒருவரை ஏற்று, தோழமையுணர்வு கொள்ளும் ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதற்கு, புனித சிரில் அவர்களின் பண்பாட்டுமயமாக்குதல் இன்றும் எடுத்துக்காட்டாய் உள்ளது என்று திருத்தந்தை கூறினார்.

நற்செய்தி, அந்தந்தப் பகுதி கலாச்சாரங்களில் உண்மையானவைகளைப் பலவீனப்படுத்துவதில்லை, மாறாக, அவற்றின் நன்மைத்தனம், உண்மை மற்றும் அழகைக் கண்டுணர உதவுகின்றது என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கி.பி. 869ம் ஆண்டு பிப்ரவரி 14ம் நாள் புனித சிரில் காலமானார். கிரேக்க நாட்டைச் சேர்ந்த உடன்பிறப்புகளான புனிதர்கள் சிரில், மெத்தோடியஸ் ஆகிய இருவரும், Pannonia மற்றும்  Moravia மக்களுக்கு நற்செய்தி அறிவித்து, ஸ்லாவிய எழுத்துக்களை உருவாக்கினர். திரு விவிலியத்தை, பழைய ஸ்லாவிய மொழியில் மொழி பெயர்த்தனர். இவ்வாறு இவர்கள், அந்த மண்ணின் சமய வாழ்வுக்கும், கலாச்சார முன்னேற்றத்திற்கும் கொடைகளாக விளங்குகின்றனர்.

22 March 2019, 14:44