Scholas Occurrentes உலகளாவிய அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் Scholas Occurrentes உலகளாவிய அமைப்பினருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

இளையோரை ஈடுபடுத்தும் உலகளாவிய அமைதித் திட்டம்

இளையோர் வருங்காலத்தவர் அல்ல, அவர்கள் இப்போது, இன்று, கடவுளின் இன்றையப் பொழுதில் இருப்பவர்கள், அவர்கள் வருங்காலத்தவர் என்பது திருத்தப்பட வேண்டும்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

புதிய தொழில்நுட்பங்களையும், உலகெங்கும் இலட்சக்கணக்கான இளையோரையும் ஈடுபடுத்தும் உலகளாவிய அமைதித் திட்டம் ஒன்றை, இவ்வியாழனன்று ஆரம்பித்து வைத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Scholas Occurrentes உலகளாவிய அமைப்பின், உரோம் புதிய அலுவலகங்களை, மார்ச் 21, இவ்வியாழன் மாலையில் பார்வையிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர், அமைதி நடவடிக்கைகளை மேலும் அதிக உறுதியுடன் தேடும் வழிகளில், தங்களை அர்ப்பணிப்பதற்கு உதவியாக, இந்த உலகளாவிய அமைதித் திட்டத்தைத் துவங்கி வைத்துள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது, உலகின் பல நாடுகளிலுள்ள இளையோருடன், காணொளி கருத்தரங்கு ஒன்றிலும் திருத்தந்தை கலந்துகொண்டார். அச்சமயத்தில், Scholas அமைப்புகளால் ஊக்குவிக்கப்பட்ட, கலைகள், விளையாட்டு மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களில் பங்குபெற்ற சிறாரின் பகிர்வுகளையும் திருத்தந்தை கேட்டறிந்தார். இந்தக் காணொளி கருத்தரங்கில், இத்தாலி, பானமா, போர்த்துக்கல், உருமேனியா போன்ற நாடுகளைச் சேர்ந்த சிறார் பங்குபெற்றனர்.  

இச்சிறார், தங்களின் திறமைகளையும், படைப்பாற்றல்களையும், உலகின் ஏனைய மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ளுமாறு திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

மாணவர்களின் சுற்றுச்சூழல் ஆர்வம்

சுற்றுச்சூழலையும், பூமியையும் பாதுகாப்பதற்கு, உலகின் பல்வேறு நகரங்களில், பள்ளி மாணவர்கள், தெருக்களில் போராட்டம் நடத்தியதை இந்நாள்களில் நாம் கண்டோம்,  இளையோர், கற்பனைக்கெட்டாத சக்தியைக் கொண்டிருக்கின்றனர், அவர்கள் படைப்பாற்றல் கொண்டவர்கள், அவர்களின் இந்த படைப்பாற்றல் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று, திருத்தந்தை வலியுறுத்தினார்.

இளையோர் வருங்காலத்தவர் அல்ல, அவர்கள் இப்போது, இன்று, கடவுளின் இன்றையப் பொழுதில் இருப்பவர்கள், அவர்கள் வருங்காலத்தவர் என்பது திருத்தப்பட வேண்டும் என்று கூறியத் திருத்தந்தை, தவறுகளுக்கு எதிராய்ப் போராடுவது மட்டும் போதாது, மாறாக, நேர்மறையானவற்றை நாம் கட்டியெழுப்ப வேண்டும், வயது முதிர்ந்தவர்களோடு இளையோர் கலந்துரையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.  

அமைதி மற்றும் பொதுநலனின் அடையாளமாக, அனைத்துச் சிறாரும், குறிப்பாக, மிக வறியச் சிறார், அரசுப் பள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் கல்வி கற்க வாய்ப்பளிக்கும் ஓர் உலகை அமைப்பதற்கு, இந்த Scholas வலையமைப்பு முயற்சித்து வருகிறது. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அர்ஜென்டீனாவில் பணியாற்றிய காலத்தில் துவங்கிய Scholas Occurrentes அமைப்பு, இன்று, உலகளாவிய அமைப்பாக மாறி,190 நாடுகளில், 4 இலட்சத்து 50 ஆயிரத்துக்கு அதிகமான கல்வி நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 March 2019, 15:08