170319 ஞாயிறு மூவேளை செப உரையின்போது.... 170319 ஞாயிறு மூவேளை செப உரையின்போது....  

செபம் மற்றும் அமைதி முயற்சிகளில் ஒன்றிணைவோம்

மனித குலத்தை தொடர்ந்து துன்புறுத்தி வரும் போர்கள் மற்றும் மோதல்களின் வரிசையில், தற்போது நியூசிலாந்து நாட்டு மசூதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களின் வலியும் இணைந்துள்ளது - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நியூசிலாந்து நாட்டின் Christ Church நகரிலுள்ள இரு மசூதிகள் தாக்கப்பட்டதில் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காக செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார்.

புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, மார்ச் 17, இஞ்ஞாயிறு, நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை, நியூசிலாந்து மக்களுக்காக, வளாகத்தில் கூடியிருந்த அனைவரோடும் இணைந்து செபித்தார்.

மனித குலத்தை தொடர்ந்து துன்புறுத்தி வரும் போர்கள் மற்றும் மோதல்களின் வரிசையில், தற்போது நியூசிலாந்து நாட்டு மசூதிகளில் இடம்பெற்ற தாக்குதல்களின் வலியும் இணைந்துள்ளது என்று, தன் ஆழ்ந்த வேதனையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாக்குதல்களில் உயிரிழந்தோர், காயமுற்றோர், மற்றும் அவர்களின் குடும்பங்களுக்காகச் செபிப்பதாகவும் கூறினார்.

இஸ்லாமிய சகோதரர், சகோதரிகளுடன் தன் அருகாமையை தெரிவிப்பதாகவும், பகைமையையும், வன்முறையையும் எதிர்த்து போராட, செபம் மற்றும் அமைதி முயற்சிகளில் ஒன்றிணைவோம் என்ற அழைப்பை புதுப்பிப்பதாகவும், தன் மூவேளை செப உரையின் இறுதியில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த வெள்ளியன்று, நியூசிலாந்து நாட்டின் நகரிலுள்ள இரு மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், குறைந்தது 50 பேர் பலியாயினர், மற்றும், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2019, 15:47