மொராக்கோ கத்தோலிக்க கோவில் மொராக்கோ கத்தோலிக்க கோவில் 

திருத்தந்தையின் மொராக்கோ திருத்தூதுப் பயணம், ஒரு முன்தூது

மார்ச் 30ம், 31ம் மொராக்கோ நாட்டில், “நம்பிக்கையின் பணியாளர்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி, திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேரி தெரேசா - வத்திக்கான்

மொராக்கோ திருத்தூதுப் பயண முன்தூது

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணியைத் தொடங்கி, இந்த ஆண்டு மார்ச் 19ம் தேதியோடு ஆறு ஆண்டுகள் நிறைவுற்றுள்ளன. 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஆறு ஆண்டுகளில் 41 நாடுகளில் 27 திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். ஆசியா, ஆப்ரிக்கா, அமெரிக்கா மற்றும், ஐரோப்பியக் கண்டங்களில் இஸ்லாம் மதத்தவர், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் போன்றோரைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நாடுகளிலும் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார் திருத்தந்தை. இவ்வாண்டு பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை, 27வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபி நகரில் மேற்கொண்ட திருத்தந்தை, 28வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, மொராக்கோ முஸ்லிம் நாட்டிற்குச் செல்கிறார். மொராக்கோ அரசர் 4ம் முகம்மது அவர்கள், மற்றும் அந்நாட்டு ஆயர்களின் அழைப்பின்பேரில்,  மார்ச் 30, இச்சனிக்கிழமையும், மார்ச் 31, இஞ்ஞாயிறும் அந்நாட்டில் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவேற்றுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். “நம்பிக்கையின் பணியாளர்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி இத்திருத்தூதுப் பயண நிகழ்வுகள் நடைபெறும்.

மொராக்கோ

வட ஆப்ரிக்க நாடான மொராக்கோ, மேற்கே அட்லாண்டிக் பெருங்கடலையும், மேற்கிலிருந்து வடக்காக மத்தியதரைக் கடலையும், வடக்கே இஸ்பெயின், கிழக்கே அல்ஜீரியா, தெற்கே மேற்கு சஹாரா, மௌவுரித்தானியா ஆகிய நாடுகளையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஜிப்ரால்டர் நீர்சந்திப்பு இஸ்பெயினுக்கும், மொராக்கோவுக்கும் இடையே உள்ளது. இந்த இடைப்பட்ட தூரம் 13 கி.மீ. ஆகும். மொராக்கோ நாடு, இஸ்லாமிய பொற்கால வளமையான பாரம்பரியத்தைக் கொண்டு, ஐரோப்பியர்கள் ஆப்ரிக்காவில் நுழைவதற்கு, வாயிலாகவும் அமைந்துள்ளது. மொராக்கோ அரசு என்பது, இந்நாட்டின், அதிகாரப்பூர்வப் பெயராகும். இதன் தலைநகரம் ரபாட் (Rabat). ஆயினும், துறைமுக நகரமான Casablancaதான் இந்நாட்டின் பெரிய நகரமாகும்.  மேலும், Marrakesh, Tangier ஆகிய நகரங்களும் முக்கியமானவை. மொராக்கோவில், வாழ்கின்ற ஏறக்குறைய 3 கோடியே 40 இலட்சம் மக்களில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள். அராபியம், பெர்பெர் (Berber) ஆகிய இரண்டும் அதிகாரப்பூர்வ மொழிகளாகும். 2011ம் ஆண்டில்தான் பெர்பெர் அதிகாரப்பூர்வ மொழியாக மாறியது. ஏனெனில் ஏழாம் நூற்றாண்டில், மொராக்கோ பகுதியை முஸ்லிம்கள் ஆக்ரமிப்பதற்கு முன்னர், அங்கு வாழந்த மக்கள் பெர்பெர் மொழியையே பேசினர். இன்னும், மொராக்கோவில், அரபு மொழியில் வேறொரு பேச்சு வழக்கு மொழியும், ப்ரெஞ்சும் பேசப்படுகின்றன. அந்நாட்டின் கலாச்சாரமும், பெர்பெர், அராபிய, யூத, மேற்கு ஆப்ரிக்க மற்றும் ஐரோப்பியத் தாக்கங்களைக் கொண்டுள்ளது. இந்நாடு, அரபு கூட்டமைப்பு, மத்தியதரைக் கடல் பகுதி கழகம் மற்றும் ஆப்ரிக்க ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ளது. ஆப்ரிக்காவில் பொருளாதாரத்தில் வளர்ந்த ஐந்தாவது நாடாகவும் மொராக்கோ உள்ளது.

மொராக்கோ வரலாறு

தற்போதைய மொராக்கோ நாடு உள்ள பகுதியில், கி.மு.1,90,000க்கும், 90,000க்கும் இடைப்பட்ட காலத்தில், மனிதர் முதன்முதலில் வாழத் தொடங்கினர். இந்நாடு, முதலில் மௌரித்தானியாவின் பெர்பெர் அரசாக இருந்தது. பின்னர், கி.மு. முதல் நூற்றாண்டில் உரோமைப் பேரரசின்கீழ் வந்தது. பின்னர், மொராக்கோ பகுதியில், கி.பி. 2ம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் பரவத் தொடங்கியது. அதன் பலனாக, உரோமைப் பேரரசின் நகரங்கள், குறிப்பாக, அடிமைகள் மற்றும் பெர்பெர் விவசாயிகள் கிறிஸ்தவத்தை ஏற்றனர். கி.பி. 5ம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசு வீழ்ச்சியடைந்ததும், மொராக்கோவின் வட பகுதி, முதலில் Vandal, பின்னர் Visigoth ஜெர்மானிய பழங்குடி இனங்களால் ஆக்ரமிக்கப்பட்டது. 6ம் நூற்றாண்டில், மொராக்கோவின் வட பகுதி, பைசான்டைன் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. எனினும், அக்காலம் முழுவதும், நாட்டின் உட்பகுதியில் உயரமான மலைகளில் வாழ்ந்துவந்த பெர்பெர் இன மக்கள் தனித்தே வாழ்ந்து வந்தனர். கி.பி. 670ம் ஆண்டில், வடக்கு ஆப்ரிக்க கடற்கரைப் பகுதியை இஸ்லாமியர் முதன்முதலாக கைப்பற்றியதையடுத்து, பெர்பெர் பழங்குடிகள் இஸ்லாமைப் பின்பற்றின. ஆயினும், தங்களின் பாரம்பரியச் சட்டங்களைக் காத்துக்கொண்டு, அதேநேரம், புதிய முஸ்லிம் நிர்வாகத்திற்கு, வரிகள் செலுத்தி, அதற்கு மதிப்பும் அளித்தனர்.

தற்போது மொராக்கோ அமைந்துள்ள பகுதியில், முதல் இஸ்லாமிய நாடு, Rif மலைகளில் இருந்த Nekor அமீரகத்தின் கீழ் வந்தது. 739ம் ஆண்டில் பெர்பெர் இன மக்கள் புரட்சி செய்ததற்குப் பின்னர், Miknasa, Barghawata மாநிலங்களை உருவாக்கினர். மத்தியகால கதைகளின்படி, Abbasid என்ற இஸ்லாமியத் தலைவர், ஈராக்கில் இருந்த பழங்குடிகளைப்  படுகொலை செய்த பின்னர், Idris Ibn Abdallah அவர்கள் மொராக்கோவுக்குத் தப்பி வந்தார். இவர் மொராக்கோவிலிருந்த Awraba பழங்குடிகளிடம், பாக்தாத் நகரில் இருக்கும் இஸ்லாமிய குருக்களுடனுள்ள உறவைத் துண்டித்துவிட வற்புறுத்தினார். அதன்பின்னர், Idris அவர்கள், கி.பி. 788ம் ஆண்டில் முதல் மொராக்கோ நாட்டை உருவாக்கினார். இந்த ஆட்சியில், மொராக்கோ, முஸ்லிம்களுக்கு மைய இடமாகவும், அப்பகுதியில் மிகவும் வல்லமை கொண்டதாகவும் மாறியது. 927ம் ஆண்டில் Idris அரச பரம்பரை வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, பல்வேறு இஸ்லாமிய அரசப் பரம்பரைகளால் இந்நாடு ஆளப்பட்டு வந்தது.

மொராக்கோ இன்று

பின்னர், 1912ம் ஆண்டில், மொராக்கோவை, இஸ்பெயினும், பிரான்சும் பிரித்து ஆட்சி நடத்தின. நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்னர், 1956ம் ஆண்டில் பிரான்சிடமிருந்து, மொராக்கோ சுதந்திரம் பெற்றது. இஸ்பெயினிடமிருந்த முன்னாள் மேற்கு சஹாராவை, மொராக்கோ, தனது தென் மாநிலமாகச் சொல்லி வருகிறது. 1975ம் ஆண்டில், மொராக்கோ மற்றும் மௌரித்தானியா பகுதியில் காலனி ஆதிக்கத்தை இஸ்பெயின் நிறுத்திக்கொண்ட பின்னர், உள்ளூர் போராளிகளுக்கு இடையே கெரில்லா போர் தொடங்கியது. இறுதியில், 1979ம் ஆண்டில் மௌரித்தானியா சுதந்திரம் பெற்றது. ஆயினும் 1991ம் ஆண்டில் இடைக்கால போர் நிறுத்தம் இடம்பெறும்வரை, போர் தொடர்ந்து நடைபெற்றது. இறையாண்மை பெற்ற மொராக்கோ நாடு, தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், முடியாட்சி அரசியல் அமைப்பைக் கொண்டுள்ளது. மொராக்கோ அரசர், இராணுவம், வெளியுறவு கொள்கை, மத விவகாரம் உட்பட, பெரிய அளவில், சட்டமுறையான அதிகாரங்களைக் கொண்டிருக்கிறார். பிரதமர் மற்றும் அரசியலமைப்பு நீதிமன்றத்தை கலந்தாலோசித்த பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரத்தையும் அரசர் கொண்டிருக்கிறார். நாடாளுமன்றம் அங்கீகரித்த வரைவுத் திட்டம் சட்டமாக்கப்படுவதற்கு, அரசரின் அங்கீகாரம் அவசியம்.  

மொராக்கோவின் புவியமைப்பு

மொராக்கோ நாட்டின் பெரும்பாலான பகுதிகள் மலைகளால் நிறைந்துள்ளன. இந்நாட்டின் மலைத்தொடர்கள், அட்லாண்டிக் பெருங்கடலிலிருந்து, சஹாரா பாலைவனம் வரை நீண்டிருக்கின்றன. இந்த நாட்டிற்கு முதுகெலும்பாக அமைந்திருக்கின்ற அட்லஸ் மலைத்தொடர்கள், முக்கியமாக நாட்டின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளிலும்,  ரிஃப் மலைத்தொடர்கள் நாட்டின் வடக்குப் பகுதியிலும் காணப்படுகின்றன. இரண்டு பகுதிகளுமே பெர்பர் மக்களால் குடியேற்றம் செய்யப்பட்ட பகுதிகளாகும். 1,72,402 சதுர மைல் பரப்பளவுள்ள மொராக்கோ, சுவிட்சர்லாந்தைவிட சற்று சிறியதாகும். நாட்டின் பெரும்பாலான தென்மேற்குப் பகுதிகள், சஹாரா பாலைவனத்தில் அமைந்திருக்கின்றன. இந்நாட்டில் 12 விழுக்காட்டுப் பகுதி காடுகளாகும். அதேசமயம், தரிசு நிலங்கள் 18 விழுக்காடாகவும், 5 விழுக்காட்டு நிலப்பகுதியில் நீர்ப்பாசன வசதியும் செய்யப்பட்டுள்ளன.

பொருளாதாரம்

மொராக்கோ பொருளாதாரத்தின் முக்கியமான மூலாதாரங்களாக விவசாயம், பாஸ்பேட்டு, சுற்றுலாத்துறை ஆகியவை இருக்கின்றன. மீன் மற்றும் கடல் உணவுகளின் விற்பனையும் இங்கு முக்கியமானதாகும். தொழில்துறையும் சுரங்கமும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒன்று என்ற அளவிற்கு உதவுகின்றன. உலகின் பாஸ்பேட் உற்பத்தியில் இரண்டாவது பெரிய இடத்தை வகிக்கிறது மொராக்கோ. மதநம்பிக்கை

மொராக்கோவில் 93 விழுக்காட்டினர் மத நம்பிக்கையுடையவர்கள். அரசியலமைப்புப்படி, இஸ்லாம் அரசு மதமாகும். ஆயினும் வழிபாட்டு சுதந்திரமும் இந்நாட்டில் உள்ளது. இந்நாட்டில், பெரும்பாலானவர்கள் சுன்னி இஸ்லாம் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்நாட்டில் இரண்டாவது பெரிய மதம் கிறிஸ்தவமாக இருந்தாலும், கிறிஸ்தவர்களில் ஏறக்குறைய பலர் வெளிநாட்டவர். பாகாய் மதத்தினரும், யூதர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். எனினும், அராபிய மொழியில் எழுதப்பட்ட விவிலியத்தை வைத்திருப்பது சட்டப்படி குற்றமாகும். அந்நாட்டு குற்றவியல் சட்டத்தின்படி, இஸ்லாம் விசுவாசத்திற்கு ஊறுவிளைவிப்பதோ அல்லது முஸ்லிம்களை மதம் மாற்றுவதோ குற்றமாகும். இக்குற்றத்திற்கு சிறைத்தண்டனையும் அபராதமும் உண்டு. இந்தக் கட்டுப்பாட்டையும் மீறி, அந்நாட்டிலுள்ள கிறிஸ்தவர்களில் ஏறக்குறைய மூவாயிரம் பேர் முஸ்லிம் பின்னணியைக் கொண்டவர்கள் என 2015ம் ஆண்டில் வெளியான ஓர் அறிக்கை தெரிவிக்கின்றது.

மொராக்கோ திருத்தூதுப் பயணம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மொராக்கோ திருத்தூதுப் பயண இலச்சினையில், கிறிஸ்தவத்தைக் குறிக்கும் விதமாக ஒரு சிலுவையும், இஸ்லாமைக் குறிக்கும் விதமாக ஒரு பிறையும் உளளன, இவை, கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயுள்ள பல்சமய உறவைக் கோடிட்டு காட்டுவதாக உள்ளன.

மார்ச் 30, சனிக்கிழமை காலை 10.45 மணிக்கு உரோம் நகர் பியூமிச்சினோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை, மொராக்கோ நாட்டின் Rabat Sale பன்னாட்டு விமான நிலையத்தை, உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணிக்குச் சென்றடைவார். விமான நிலையத்தில் வழங்கப்படும் வரவேற்பில் பங்கேற்கும் திருத்தந்தை, அந்நாட்டு அரசர் 6ம் முகம்மது அவர்களையும், அதன் பின்னர், அரசு அதிகாரிகளையும் சந்தித்து, தன் முதல் உரையை அங்கு வழங்குவார். இச்சந்திப்பிற்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசர் 5ம் முகம்மது அவர்களின் சமாதியையும், 6ம் முகம்மது நிறுவனத்தையும் பார்வையிடுவார். அந்நாட்டின் காரித்தாஸ் நிறுவனத்தால் பராமரிக்கப்படும் புலம்பெயர்ந்தோரை திருத்தந்தை சந்திப்பது, மார்ச் 30ம் தேதியின் இறுதி நிகழ்வாக அமையும்.

மார்ச் 31, ஞாயிறன்று ரபாட் பேராலயத்தில் அருள் பணியாளர்கள், துறவியர், மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு அவை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்து, உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்று பிற்பகல், விசுவாசிகளுக்கு திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்குவார். ஞாயிறு மாலை 5.15 மணிக்கு மொராக்கோ விமான நிலையத்திலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரவு 9.30 மணிக்கு உரோம் நகர் சம்பீனோ விமான நிலையம் வந்தடைவார். இத்துடன் திருத்தந்தையின் 28வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் முற்றுப்பெறும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 March 2019, 13:36