தேடுதல்

Vatican News
நியூசிலாந்தில் இரு மசூதிகளில் நிகழ்ந்த தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு மரியாதை நியூசிலாந்தில் இரு மசூதிகளில் நிகழ்ந்த தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு மரியாதை 

பொருள் உதவிகளோடு, ஆன்மீக உதவியையும் வழங்குங்கள்

மார்ச் 17, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூன்று டுவிட்டர் செய்திகளில் ஒன்று, நியூசிலாந்து நாட்டில் இரு மசூதிகளில் நிகழ்ந்த தாக்குதல்களை மையப்படுத்தி அமைந்திருந்தது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மார்ச் 18, இத்திங்களன்று வழங்கப்பட்டுள்ள நற்செய்தியில், தீர்ப்பளிக்காதீர்கள், கண்டனம் செய்யாதீர்கள், மன்னியுங்கள் என்று, இயேசு கூறிய மூன்று கட்டளைகளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியில் கருத்தொன்றை பதிவு செய்துள்ளார்.

"ஒருவரை தீர்ப்பிடாதிருக்கவும், கண்டனம் செய்யாதிருக்கவும், மன்னிப்பு வழங்கவும் நாம் என்ன செய்யவேண்டும்? கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; கொடுக்கும்போது, தாராள மனதுடன் செயல்படுங்கள். பொருள்கள் வடிவில் உதவிகள் செய்வதோடு, ஆன்மீக உதவியையும் வழங்குங்கள். தேவையில் இருப்போருடன் உங்கள் நேரத்தைச் செலவிடுங்கள்; நோயுற்றோரை சந்தியுங்கள்; புன்சிரிப்புடன் பரிசளியுங்கள்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம் பெற்றிருந்தன.

மேலும், மார்ச் 17, இஞ்ஞாயிறன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மூன்று டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

தர்மம், செபம் மற்றும் உண்ணா நோன்பு என்ற மூன்று வழிகளைப் பின்பற்ற, இத்தவக்காலத்தில் இறைவன் நம்மைக் கேட்கிறார் என்று தன் முதல் டுவிட்டர் செய்தியிலும், செபம் வழியே இறைவனுடனும், தர்மம் வழியே அயலவருடனும், உண்ணா நோன்பு வழியே நம்முடனும் இணைக்கப்படுகிறோம் என்ற சொற்களை தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியிலும் திருத்தந்தை வெளியிட்டார்.

மார்ச் 15, கடந்த வெள்ளிக்கிழமை, நியூசிலாந்து நாட்டில் இரு மசூதிகளில் நிகழ்ந்த தாக்குதல்களை மையப்படுத்தி தன் மூன்றாவது டுவிட்டர் செய்தியை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாக்குதல்களில் பலியானோருக்கு தன் செப உறுதியை வழங்கியுள்ளதுடன், பகைமையையும், வன்முறையையும் எதிர்த்துப் போராட, செபத்தையும், அமைதி முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு இச்செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

18 March 2019, 15:58