திருத்தந்தையுடன் தென் சூடான் குடியரசுத் தலைவர் Salva Kiir Mayardit  திருத்தந்தையுடன் தென் சூடான் குடியரசுத் தலைவர் Salva Kiir Mayardit  

திருத்தந்தை, தென் சூடான் அரசுத்தலைவர் சந்திப்பு

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கான்டர்பரி ஆங்லிக்கன் பேராயர் Justin Welby அவர்களுடன், தென் சூடான் குடியரசுக்கு, கிறிஸ்தவ ஒன்றிப்புப் பயணம் ஒன்றை மேற்கொள்ள விரும்பிய தனது ஆவலை 2017ம் ஆண்டிலேயே வெளிப்படுத்தினார்

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

தென் சூடான் குடியரசுத் தலைவர் Salva Kiir Mayardit அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மார்ச் 16, இச்சனிக்கிழமையன்று, திருப்பீடத்தின் நூலக அறையில் இருபது நிமிடங்களுக்கு மேலாக, தனியே சந்தித்துப் பேசினார்.

தென் சூடான் அரசின், பல்வேறு அமைச்சகங்களின் 11 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவுடன் திருப்பீடம் சென்ற அரசுத்தலைவர் Mayardit அவர்கள், திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  அவர்களையும், பன்னாட்டு உறவுகளின் திருப்பீட செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார். 

தென் சூடான் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், நாட்டின் மீள்கட்டமைப்பிலும், ஒப்புரவு நடவடிக்கைகளிலும், கல்வி மற்றும், நலவாழ்விலும், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் ஆகியவை குறித்த திருப்தியான மனநிலை, இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன.

மோதல்களை நிரந்தரமாக நிறுத்துதல், புலம்பெயர்ந்தோரும், நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்ந்தோரும், மீண்டும் நாட்டிற்குத் திரும்புதல், நாட்டின் ஒருங்கிணைந்த முன்னேற்றம் போன்றவை குறித்து, பல்வேறு அரசியல் தலைவர்களுடன் அண்மையில் இடம்பெற்ற ஒப்பந்தம் செயல்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து, தென் சூடான் அரசு பிரதிநிதிகள் குழுவினரிடம் இச்சந்திப்புகளில் வலியுறுத்தப்பட்டன என்று, திருப்பீட செய்தி தொடர்பகம் கூறியது.

தென் சூடான் திருத்தூதுப்பயணம்

தென் சூடான் மக்களுடன் தன் அன்பை வெளிப்படுத்துவது மற்றும், அந்நாட்டின் அமைதி நடவடிக்கைகளை ஊக்கப்படுத்துவதன் அடையாளமாக, அந்நாட்டிற்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்வது குறித்த சூழலை அமைக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவரிடம் கேட்டுக்கொண்டார்.

2011ம் ஆண்டில் சுதந்திரம் அடைந்த தென் சூடான், உலகிலே புதிய நாடாக மாறியது. ஆயினும் அந்நாட்டில், அரசுக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே தொடர்ந்து உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இச்சந்திப்பின் இறுதியில், "நற்செய்தியின் மகிழ்வு (Evangelii gaudium)", "அன்பின் மகிழ்வு (Amoris laetitia)", "இறைவா உமக்கே புகழ் (Laudato si')", "அகமகிழ்ந்து களிகூருங்கள் (Gaudete et exsultate)" ஆகிய தனது திருத்தூது அறிவுரைத் தொகுப்புகளையும், அபுதாபியில், Al-Azhar அவர்களுடன் இணைந்து கையெழுத்திட்ட மனித உடன்பிறப்பு நிலை அறிக்கை ஒன்றின் நகலையும், உலக அமைதி நாளுக்கான செய்தி ஒன்றின் நகலையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தென் சூடான் அரசுத்தலைவருக்கு நன்கொடையாக அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 March 2019, 15:33