தேடுதல்

Corte dei Conti அமைப்பின் பிரதிநிதிகளை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் Corte dei Conti அமைப்பின் பிரதிநிதிகளை புனித 6ம் பவுல் அரங்கத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

நன்னெறி அர்ப்பணம், அனைவருக்கும் பொதுவானதே

சமூக நலனை மனதில்கொண்டு உழைக்கும்போது, நன்முறையில் பயிற்சி பெற்ற மனச்சான்று, நீதி குறித்த உறுதி நிலைப்பாடு, சமூகத்திற்கான தாராள அர்ப்பணம் ஆகியவை இன்றியமையாதவை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தின் பொதுநலனை ஊக்குவிக்கும் நோக்கத்தில், அரசுக்கு உதவும், தனிச் சுதந்திரம் உள்ள Corte dei Conti என்ற அரசு அமைப்பை, இத்திங்கள் காலை சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனித உரிமைகளைப் பாதுகாப்பதில், இவ்வமைப்பினர் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டினார்.

தனிமனித நலனையும் சமூக நலனையும் மனதில்கொண்டு உழைக்கும்போது, நன்முறையில் பயிற்சி பெற்ற மனச்சான்று, நீதி குறித்த உறுதி நிலைப்பாடு, சமூகத்திற்கான தாராள அர்ப்பணம் ஆகியவை இன்றியமையாதவை என்பதை தன் உரையில் வலியுறுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத நம்பிக்கையாளர்களுக்கும் மத நம்பிக்கையற்றோருக்கும் நன்னெறி அர்ப்பணம் என்பது பொதுவானதே என்றார்.

அரசு நிர்வாகத்தில், பல்வேறு அமைப்புக்களின் நடைமுறைகளில் உதவும் இந்த Corte dei Conti என்ற அமைப்பு, உலகில் உயரிய நோக்கம், மதிப்பீடுகள், மனிதாபிமான புரிந்துகொள்ளுதல், அதாவது, அனைத்து சமூகத்திற்கும் உயரிய நோக்கத்தை வழங்குதல், என்ற குணநலன்களுடன் செயல்படும்போது, இது, அரசு செயல்பாடுகளின் வெற்றிக்கு உதவுகிறது எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சமூகத்தில் காணப்படும் இலஞ்ச ஊழல் சீர்கேடுகள் குறித்தும் தன் கவலையை வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவற்றை அகற்ற, இவ்வமைப்பினர், தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 March 2019, 16:10