தேடுதல்

  “கிறிஸ்து வாழ்கிறார், அவரே நம் நம்பிக்கை திருத்தூது அறிவுரை ஏட்டில் கையெழுத்திடுகிறார் திருத்தந்தை “கிறிஸ்து வாழ்கிறார், அவரே நம் நம்பிக்கை திருத்தூது அறிவுரை ஏட்டில் கையெழுத்திடுகிறார் திருத்தந்தை  

திருத்தந்தையின் லொரெத்தோ மேய்ப்புப்பணி பயணம்

1957ம் ஆண்டில் திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள் லொரெத்தோ புனித வீடு சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியதற்குப் பின்னர், மார்ச் 25, இத்திங்கள் காலையில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி நிறைவேற்றினார்

மேரி தெரேசா - வத்திக்கான்

மார்ச் 25, இத்திங்கள், அன்னை மரியாவுக்கு, ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட விழா. இந்நாளில், உலகப் புகழ், இத்தாலியின் லொரெத்தோ அன்னை மரியா திருத்தலம் சென்று, திருப்பலி நிறைவேற்றி, இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய, “கிறிஸ்து வாழ்கிறார், அவரே நம் நம்பிக்கை (Vive Cristo, esperanza nuestra)” என்ற திருத்தூது அறிவுரை ஏட்டில் கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்த முக்கிய நிகழ்வுக்காக, இத்திங்கள் காலை எட்டு மணிக்கு வத்திக்கானிலிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, லொரெத்தோ நகருக்கு, காலை ஒன்பது மணிக்குச் சென்றடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு லொரெத்தோ பேராயர் Fabio Dal Cin, நகர மேயர் போன்ற தலைவர்கள் உட்பட, பத்தாயிரத்திற்கு அதிகமான மக்கள் திருத்தந்தையை வரவேற்றனர். பின்னர், லொரெத்தோ அன்னை மரியா பசிலிக்கா சென்று, அங்குள்ள, ‘நாசரேத்து புனித வீடு’ எனப்படும் சிற்றாலயத்தில் சிறிது நேரம் செபித்தார் மற்றும் திருப்பலியும் நிறைவேற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். தங்களின் அழைப்பைத் தெளிந்துதேர்ந்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சில இளையோர் உட்பட, சில திருஅவைத் தலைவர்கள் திருத்தந்தையின் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர். புதிய மற்றும் முடிவில்லாத உடன்படிக்கைப் பேழையே, மரியே, உம்மில், தூய ஆவியாரால், இறைமகனின் மறையுண்மை மனிதஉரு எடுத்தது. ஆண்டவரே, உம் வார்த்தையின்படியே ஆகட்டும் என, விசுவாசம் மற்றும் தாழ்ச்சியுடன், நாமும் சொல்வோம் எனச் செபித்தார், திருத்தந்தை. 1957ம் ஆண்டில் திருத்தந்தை 9ம் பயஸ் அவர்கள் இச்சிற்றாலயத்தில் திருப்பலி நிறைவேற்றியதற்குப் பின்னர், அதாவது கடந்த 62 ஆண்டுகளுக்குப் பின்னர், தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருப்பலி நிறைவேற்றியுள்ளார். லொரெத்தோ பசிலிக்காவிலுள்ள இந்த சிற்றாலயம், புனித பூமியிலுள்ள நாசரேத்தில், திருக்குடும்பம் வாழ்ந்த வீடாகும். சிலுவைப்போர் காலத்தில், இந்த வீடு, லொரெத்தோவிற்குக் கொண்டுவரப்பட்டது என மரபு வழியாகச் சொல்லப்படுகிறது.

இத்திருப்பலியை முடித்து, லொரேத்தோ அன்னை மரியின் பீடத்தில், “கிறிஸ்து வாழ்கிறார், அவரே நம் நம்பிக்கை” என்ற திருத்தூது அறிவுரை ஏட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கையெழுத்திட்டார்,. இளையோருக்கு எழுதும் ஒரு மடல் போன்று இந்த ஏடு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 3ம் தேதி முதல் 28ம் தேதி முடிய, இளையோர், விசுவாசம் மற்றும் அழைப்பு என்ற தலைப்பில் வத்திக்கானில் நடைபெற்ற, உலக ஆயர்கள் மாமன்றத்தின் தீர்மானங்கள் அடங்கிய ஏடாகும் இது. வத்திக்கானுக்கு வெளியே, இத்தகைய அறிவுரை தொகுப்பில் கையெழுத்திடும் நடவடிக்கையை, 1995ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.  

லொரெத்தோ சிற்றாலயத்தில் செபித்த பின்னர், அந்த பசிலிக்காவில், இத்தாலிய Unitalsi அமைப்பைச் சார்ந்த 800 இளையோரைச் சந்தித்தார் திருத்தந்தை. அந்த இளையோர்,  சக்கர நாற்காலிகளில் அழைத்து வந்திருந்த, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோயாளிகளை, ஒவ்வொருவராகச் சந்தித்து, செபமாலைகளையும் அளித்தார், திருத்தந்தை பிரான்சிஸ். அதன்பின்னர், திருத்தல வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு உரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த உரையை மையப்படுத்தி, இத்திங்களன்று டுவிட்டரிலும் செய்தி வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். வரவேற்றல், மன்னித்தல், பிறரை மதித்தல், தன்னையே வழங்கும் அன்பு ஆகியவற்றின் அடிப்படையில், அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வுப் பாதையைப் பின்பற்ற, ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இளையோர்க்கு, புனித கன்னி மரி உதவுவாராக என்ற சொற்களை, தன் டுவிட்டரில் திருத்தந்தை பதிவு செய்தார்.   

லொரெத்தோவில் ஆயர்களுடன் மதிய உணவருந்தினார் திருத்தந்தை. பின்னர், அங்கிருந்து Montorso ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து, நகர அதிகாரிகளுக்கு நன்றி சொல்லி விடைபெற்றார் திருத்தந்தை பிரான்சிஸ். லொரெத்தோவில், ஆறு மணி நேர மேய்ப்புப்பணி பயணத்தை நிறைவு செய்து, இத்திங்கள் மாலை 3.45 மணிக்கு வத்திக்கான் வந்து சேர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2019, 15:07