தேடுதல்

Vatican News
ஈராக் நாட்டின், டைகிரிஸ் நதியில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கியவர்களைக் காக்கும் குழுவினர் ஈராக் நாட்டின், டைகிரிஸ் நதியில் இடம்பெற்ற படகு விபத்தில் சிக்கியவர்களைக் காக்கும் குழுவினர் 

ஈராக்கில் படகு விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்

ஆப்ரிக்காவில் இடாய் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக், ஜிம்ப்பாபுவே மற்றும் மலாவி நாடுகளின் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, திருத்தந்தை உதவி

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

ஈராக் நாட்டின் வடக்கில், மொசூல் நகருக்கு அருகில், டைகிரிஸ் நதியில் இடம்பெற்ற படகு விபத்து, தனக்கு மிகுந்த கவலையை அளித்துள்ளது எனவும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிப்பதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மார்ச் 21, இவ்வியாழனன்று Nowruz எனப்படும் பாரசீக புத்தாண்டைக் கொண்டாடிக்கொண்டிருந்த இந்த மக்கள் பயணம் மேற்கொண்ட படகு கவிழ்ந்ததில், பெண்கள், சிறார்  உட்பட குறைந்தது 94 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதில் இறந்தவர்கள், இறைவனின் நிறைசாந்தியைப் பெறவும், மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்காகவும், ஈராக் நாட்டினர் அனைவரும் ஆறுதலும் சக்தியும் பெறவும் தான் செபிப்பதாகவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

திருத்தந்தையின் ஆறுதலும் செபமும் நிறைந்த தந்திச் செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

படகுப் பயணத்தின்போது நதியில் ஏற்பட்ட நீர்சுழற்சியில் படகு கவிழ்ந்தது என்றும், நீச்சல் தெரியாத பலர் இறந்தனர் என்றும் கூறப்படுகின்றது.

மேலும், ஆப்ரிக்காவில் இடாய் புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மொசாம்பிக், ஜிம்ப்பாபுவே மற்றும் மலாவி நாடுகளின் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கென, முதல் கட்ட உதவியாக, ஒவ்வொரு நாட்டிற்கும் ஐம்பதாயிரம் யூரோக்களை, திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ளது, ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற திருப்பீட அவை. 

22 March 2019, 15:11