தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை திருத்தந்தையின் மறைக்கல்வியுரை   (Vatican Media )

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை – 'உமது அரசு வருக'

இவ்வுலகம் பாவத்தால் நிறைந்துள்ளதையும், பலரின் இதயங்கள் திறக்க மறுப்பதையும் காணும்போது, 'உமது அரசு வருக' என, இறைவனை நோக்கி நாம் இறைஞ்ச வேண்டிய ஒரு தேவையை உணர்கிறோம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உரோம் நகரில் குளிர் காலம் முடிவுறும் தறுவாயில், கோடைக்காலத்திற்கு இடைப்பட்ட இளவேனிற்காலம் இந்த ஆண்டு முன்னதாகவே வந்துவிட்டதோ என்ற பொய்த் தோற்றத்தை காலநிலை தந்துகொண்டிருக்க, அதாவது, சூரிய ஒளியின் தாக்கம் வழக்கத்தைவிட அதிகமாக இருக்க, திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரையும், கடந்த வாரத்தைப்போல், தூய பேதுரு வளாகத்திலேயே இடம்பெற்றது. சாதகமான தட்பவெப்ப நிலையைப் பயன்படுத்தி பெருமெண்ணிக்கையில் திருப்பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் தூய பேதுரு வளாகத்தை நிறைத்திருக்க, முதலில் புனித மத்தேயு நற்செய்தியின் 13ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது.  ‘இயேசு அவர்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும்விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும்விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்’(மத். 13, 31-32.) என்பது வாசிக்கப்பட்டபின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ‘வானகத்தந்தாய்’ என்ற செபம் குறித்த மறைக்கல்வித்தொடர் பகுதியைத் துவக்கினார்.

அன்பு சகோதரர் சகோதரிகளே, வானகத் தந்தாய் என்ற செபம் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில்  இப்போது, இச்செபத்தின் இரண்டாவது விண்ணப்பமாகிய, 'உமது அரசு வருக' என்பது குறித்து நோக்குவோம். இறையரசின் வருகை குறித்த இந்த விண்ணப்பம், அடிக்கடியும்,  அவசரமானதாகவும் வழங்கப்பட்டுள்ளது. இயேசு ஏற்கனவே வந்துள்ளார் என்பதுடன், இறையரசு குறித்த எண்ணற்ற அடையாளங்களும் இருக்கின்றன. இருப்பினும், இவ்வுலகம் பாவத்தால் நிறைந்துள்ளதையும், பலரின் இதயங்கள் திறக்க மறுப்பதையும் காணும்போது, 'உமது அரசு வருக' என இறைவனை நோக்கி நாம் இறைஞ்ச வேண்டிய ஒரு தேவையை உணர்கிறோம். இறையரசு வருவதற்கு ஏன் இவ்வளவு காலதாமதமாகிறது என நாம் சிலவேளைகளில் சிந்திக்கலாம். ஆனால், கடவுள் நம்மைப்போல் அல்ல. அவர் பொறுமை நிறைந்தவர். வன்முறையால் அல்ல, மாறாக, கனிவும் சாந்தமும் உள்ள நிலையில் அதனை உருவாக்க விரும்புகிறார் இறைவன். ஏனெனில், இது ஒரு கடுகு விதையைப் போன்றது. அளவில் மிகச் சிறியதாக இருந்தாலும், கிளைகள் விடும் பெரிய மரமாக வளரவல்லது. கடவுள் எப்போதும் நம்மை வியப்பில் மூழ்கடிக்கிறார். இவ்வுலகையே நம்பிக்கையால் நிறைத்த, உதயமாம் இயேசுவின் உயிர்ப்பை நோக்கி இட்டுச்செல்லும் நிகழ்வை புனித வெள்ளியன்று இரவில் நாம் பார்க்கிறோம். நம் பாவங்கள் மற்றும் தோல்விகள் மத்தியிலும், துன்புறுவோர் மற்றும் தேவையிலிருப்போர் சார்பாகவும், 'உமது அரசு வருக', என்ற இந்த செப விண்ணப்பத்தை நம்பிக்கையுடன் நாடுவோம். ஏனெனில், திருவெளிப்பாட்டு நூலில் கூறப்பட்டுள்ள, “ஆம், விரைவாகவே வருகிறேன்” என்கிறார். ஆமென். ஆண்டவராகிய இயேசுவே, வாரும் (திருவெளி.22:20), என்ற வார்த்தைகளை தூய ஆவியார் அவர்கள், விவிலியம் முழுவதும் பதித்துள்ளார்.

இவ்வாறு தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்று, திருநீற்று புதனன்று துவங்கியுள்ள தவக்காலத்தில், தவ மற்றும் மனமாற்ற முயற்சிகளுடன் அடங்கிய உண்மையான உணர்வுகளுடன், தந்தையின் வீட்டுக்குத் திரும்பிச் செல்வதுபோல் செயல்படுவோம். அவருடன் மிக நெருங்கிய ஒன்றிப்பில் நம்மை இணைக்கும் நோக்கில், நம்மை வரவேற்க அவர் ஆவலுடன் காத்திருக்கிறார் எனக் கூறி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

06 March 2019, 12:30