தேடுதல்

Vatican News
6ம் ஆண்டு நிறைவுக்கு வெளியிடப்பட்ட பதக்கம் 6ம் ஆண்டு நிறைவுக்கு வெளியிடப்பட்ட பதக்கம்  

திருத்தந்தை பிரான்சிஸ் தலைமைப் பணியில் ஆறு ஆண்டுகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆறு ஆண்டுகளில் உலகின் நாற்பது நாடுகளில், 27 திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். கடந்த பிப்ரவரி 3, 4 ஆகிய நாள்களில் அபுதாபிக்கு வரலாற்று சிறப்புமிக்க திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் தலைமைப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறாம் ஆண்டு, மார்ச் 13, இப்புதனன்று நிறைவடையும்வேளையில், கத்தோலிக்கர், திருத்தந்தைக்காக சிறப்பான செபங்களை, மார்ச் 12, இச்செவ்வாயன்று தொடங்கியுள்ளனர்.

இந்த ஆறு ஆண்டுகளில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப் பணி பற்றி, திருஅவையில் ஊடகத்துறைப் பொறுப்பாளர்கள் சிலர் தங்களின் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.

குடும்பம், இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றங்கள் உட்பட, மூன்று உலக ஆயர்கள் மாமன்றங்களையும், திருஅவையில் சிறியோர் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஒரு மாமன்றத்தையும் திருத்தந்தை நடத்தியுள்ளார். மேலும், வருகிற அக்டோபரில் நடைபெறவிருக்கும் அமேசான் பகுதிக்கென, ஆயர்கள் மாமன்றத் தயாரிப்பும் திருஅவையில் இடம்பெற்று வருகின்றது.

திருஅவையின் வாழ்வின் மையத்தில் எல்லாரும் ஒன்றிணைந்து வருவதன் முக்கியத்துவம், திருத்தந்தையின் தலைமைப்பணியில் தெளிவாகத் தெரிகின்றது என்றும்,  இது, பலன்களை விரைவாகத் தந்துள்ளது என்றும், ஊடகத்துறைப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருத்தூதுப் பயணங்கள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆறு ஆண்டுகளில் உலகின் 41 நாடுகளில், 27 திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார், இவ்வாண்டு பிப்ரவரி 3, 4 ஆகிய நாள்களில் அபுதாபிக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தூதுப் பயணத்தில், 4ம் தேதியன்று, எகிப்தின் பெரிய முஸ்லிம் தலைமைக் குரு Al-Azhar அவர்களுடன் இணைந்து, மனித உடன்பிறந்த நிலை பற்றிய வரலாற்று சிறப்புமிக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

மேலும், இந்த மார்ச் 30, 31 ஆகிய தேதிகளில், மொராக்கோ, வருகிற மே 5 முதல் 7 வரை, பல்கேரியா, வட மாசிடோனியா, என இந்த ஆண்டில் மேலும் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்ளவிருக்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியை பாதுகாத்தலை வலியுறுத்தும் திருத்தந்தை வெளியிட்ட Laudato Si  திருமடல், இக்கால காலநிலை பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.

புவனோஸ் அய்ரெஸ் பேராயராகப் பணியாற்றிய கர்தினால் Jorge Mario Bergoglio அவர்கள், 2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, திருஅவையின் 266வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், திருத்தந்தை பிரான்சிஸ் என்ற பெயரையும் ஏற்றார். இவர், 1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி, அர்ஜென்டீனா நாட்டின் புவனோஸ் அய்ரெஸ் நகரில் பிறந்தார்.

12 March 2019, 15:24