தேடுதல்

மத்திய ஆப்ரிக்க குடியரசிலுள்ள பான்குய் நகரின் சிறார் மருத்துவமனை மத்திய ஆப்ரிக்க குடியரசிலுள்ள பான்குய் நகரின் சிறார் மருத்துவமனை 

நோயாளர்க்குப் பணியாற்றுவது, இயேசுவுக்கே பணியாற்றுவதாகும்

மத்திய ஆப்ரிக்க குடியரசின் பான்கி நகரில், குழந்தை இயேசு மருத்துவமனை, திருப்பீடத்தின் நிதியுதவியால் புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

மத்திய ஆப்ரிக்க குடியரசின் பான்கி (Bangui) நகரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விருப்பத்தின்பேரில், சிறார் மருத்துவமனை ஒன்று, மார்ச் 02, இச்சனிக்கிழமையன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குழந்தை இயேசு என்ற இந்த சிறார் மருத்துவமனை திறப்பு விழாவுக்கு, காணொளிச் செய்தி வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயாளர்க்குப் பணியாற்றுகின்றவர்கள், இயேசுவுக்கே பணியாற்றுகின்றார்கள் என்று கூறினார்.

பான்கி நகரில் சிறார் நலவாழ்விற்கென, புதிதாக மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது, தனக்கு மகிழ்வைத் தருகின்றது என்றும், இரக்கத்தின் யூபிலி ஆண்டில் துவங்கப்பட்ட இந்நடவடிக்கை, இரக்கத்தைத் தெளிவாக வெளிப்படுத்தும் அடையாளமாக உள்ளது என்றும் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2015ம் ஆண்டு நவம்பரில், மத்திய ஆப்ரிக்க குடியரசுக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரக்கத்தின் யூபிலி ஆண்டைத் துவங்கி வைப்பதன் அடையாளமாக, நவம்பர் 25ம் தேதி, பான்கி பேராலயத்தின் புனிதக் கதவைத் திறந்து வைத்தார். இறைத்தந்தையின் இரக்கத்திற்காக மன்றாடும் ஆன்மீகத் தலைநகரமாக  பான்குய் நகரம் மாறியுள்ளது என்றும், அமைதி, இரக்கம், ஒப்புரவு, மன்னிப்பு மற்றும் அன்புக்காக நாம் செபிப்போம் என்றும், அச்சமயத்தில் திருத்தந்தை கூறினார்.

புனிதக் கதவு இன்னும் திறக்கப்பட்டுள்ளது எனவும், இந்த சிறார் மருத்துவமனைக்கும், இதில் பணியாற்றும் எல்லார் மீதும், இரக்கத்தின் ஆறு வாழ்வு வழங்குகின்றது எனவும், நான் நினைக்க விரும்புகிறேன் என அச்செய்தியில் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

திருப்பீடத்தின் நிதியுதவியால், புதுப்பிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த குழந்தை இயேசு மருத்துவமனையை, திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பாளரான, கர்தினால் Konrad Krajewski அவர்கள் திறந்து வைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2019, 15:12