தேடுதல்

திருத்தந்தை,மால்ட்டா குடியரசுத் தலைவர் சந்திப்பு திருத்தந்தை,மால்ட்டா குடியரசுத் தலைவர் சந்திப்பு 

திருத்தந்தையைச் சந்தித்த மால்ட்டா குடியரசுத் தலைவர்

மால்ட்டா அரசுத்தலைவர் Preca அவர்கள், திருத்தந்தையையும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், சந்தித்து கலந்துரையாடினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மால்ட்டா குடியரசுத் தலைவர் Marie-Louise Coleiro Preca அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, மார்ச் 21, இவ்வியாழனன்று, திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

மால்ட்டா குடியரசின், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவுடன் திருப்பீடம் சென்ற அரசுத்தலைவர் Preca அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் நேரடிப் பொதுச்செயலரும், மால்ட்டா நாட்டவருமான அருள்பணி Antoine Camilleri அவர்களையும் சந்தித்து, கலந்துரையாடினார்.

மால்ட்டா குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டின், சமுதாய, கலாச்சார மற்றும் ஆன்மீக முன்னேற்றத்தில் தலத்திருஅவையும் அரசும் ஆற்றும் பணிகள் ஆகியவை குறித்தும், சிறப்பாக, அந்நாட்டு இளையோருக்கு திருஅவை ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

மால்ட்டா நாடு, ஐரோப்பிய நாடுகளுடன் இணைவது, மத்தியதரைக் கடல் பகுதியில் நிலவும் பிரச்சனைகள், குடிபெயர்வோர் சந்திக்கும் சவால்கள், நாட்டு முன்னேற்றம், மற்றும் பலசமய உரையாடல் ஆகிய பல்வேறு கருத்துக்களும் இச்சந்திப்புகளில் பேசப்பட்டன.

மால்ட்டா குடியரசுத் தலைவருடன் நிகழ்ந்த இச்சந்திப்பைத் தொடர்ந்து, விசுவாசக் கோட்பாட்டு பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் பிரான்சிஸ்கோ இலதாரியா அவர்களையும், ஈராக் நாட்டின் தூதராகப் பணியாற்றி ஒய்வு பெற்றுச்செல்லும் Omer Ahmed Kerim Berzinji அவர்களையும் இவ்வியாழன் காலை, திருப்பீடத்தில் சந்தித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 March 2019, 15:37