மன்னர் 6ம் முகம்மது நிறுவனத்தில் நடைபெற்ற சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் மன்னர் 6ம் முகம்மது நிறுவனத்தில் நடைபெற்ற சந்திப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் 

மத சகிப்புத்தன்மையை வளர்க்கும் 6ம் முகம்மது நிறுவனம்

தீவிரவாதப் போக்குகளைக் களையவும், மதச் சகிப்புத்தன்மையை வளர்க்கவும் இஸ்லாம் மதத்தலைவர்களுக்கு உதவும் நோக்கத்தில், அவர்களுக்குப் பயிற்சி வழங்க, 2015ம் ஆண்டு, ஒரு நிறுவனத்தைத் துவக்கிவைத்தார், மன்னர் 6ம் முகம்மது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

அரசுத்தலைவர் மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, அங்கிருந்து  8.2 கி.மீ. தூரத்திலுள்ள 6ம் முகம்மது நிறுவனம் நோக்கி காரில் பயணமானார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மத சகிப்புத்தன்மை கொண்ட இஸ்லாம் மதத்தை உலகில் பரப்பவேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட 6ம் முகம்மது நிறுவனம், 2015ம் ஆண்டு, மார்ச் மாதம் 27ம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. மொராக்கோ நாட்டில் Casablanca நகரில், 2003ம் ஆண்டு நிகழ்ந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, மத சகிப்புத்தன்மையை வளர்க்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கும் எண்ணம், மன்னர் 6ம் முகம்மது அவர்களின் உள்ளத்தில் தோன்றியது. தீவிரவாதப் போக்குகளைக் களையவும், மதச் சகிப்புத்தன்மையை வளர்க்கவும் இஸ்லாம் மதத்தலைவர்களுக்கு உதவும் நோக்கத்தில், அவர்களுக்குப் பயிற்சி வழங்க, 2015ம் ஆண்டு, இந்நிறுவனத்தைத் துவக்கிவைத்தார், மன்னர் 6ம் முகம்மது.

இந்நிறுவனம் துவக்கப்பட்டதிலிருந்து, ஆப்ரிக்காவின் மாலி, செனெகல், ஐவரி கோஸ்ட், கினி, நைஜீரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலிருந்து, இஸ்லாமிய மதத்தலைவர்கள், இங்கு பயிற்சி பெற்றுள்ளனர்.

மன்னர் 6ம் முகம்மது நிறுவனத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சமய விவகாரங்கள் துறையின் அமைச்சர், முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். இரு மாணவர்களின் சாட்சிய உரைகளும் இங்கு இடம்பெற்றன. இறுதியில், மன்னர் 6ம் முகம்மது அவர்கள், திருத்தந்தையை வாகனம் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

மொராக்கோ நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ள அழைப்பு விடுத்து, அவரை வரவேற்று கௌரவித்த மன்னர் 6ம் முகம்மது அவர்கள், 17ம் நூற்றாண்டின் மத்தியில் துவங்கிய Alawite அரசப் பரம்பரையின் 23வது மன்னராவார்.

நவீன மொராக்கோவின் தந்தை என்றழைக்கப்படும் மன்னர் 5ம் முகம்மதுவின் மரணத்திற்குப்பின், ஆட்சிக்கு வந்த அவரது சகோதரர், 2ம் ஹசானின் மகனாவார், தற்போதைய மன்னர் 6ம் முகம்மது. 1963ம் ஆண்டு பிறந்த மன்னர் 6ம் முகம்மது அவர்கள், சட்ட இயல், பொருளியல், சமூகவியல் ஆகியவற்றில் முதுகலைப் பட்டங்களைப் பெற்றதுடன், இராணுவத்திலும் பணியாற்றியுள்ளார். 1999ம் ஆண்டு, மொராக்கோவின் மன்னராக முடிசூட்டப்பட்ட இவர், இளவரசி லைலா சல்மா அவர்களை மணமுடித்தார். இவ்விருவருக்கும், மௌலாய் ஹசான் என்ற மகனும், லைலா காதிஜா என்ற மகளும் உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2019, 15:44