தேடுதல்

Vatican News
இத்தாலிய கூட்டுறவு கழகங்களின் கூட்டமைப்பினர் சந்திப்பு இத்தாலிய கூட்டுறவு கழகங்களின் கூட்டமைப்பினர் சந்திப்பு   (Vatican Media)

கூட்டுறவின் அற்புதம், இலாபத்தை அல்ல, உறவுகளைச் சார்ந்துள்ளது

1919ம் ஆண்டு மே 14ம் தேதி தொடங்கப்பட்ட இத்தாலிய கூட்டுறவு கழகங்களின் கூட்டமைப்பில், ஏறக்குறைய 19 ஆயிரம் கூட்டுறவு கழகங்கள் அங்கம் வகிக்கின்றன. இவை, 5,28,000 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளன

மேரி தெரேசா - வத்திக்கான் செய்திகள்

கூட்டுறவின் அற்புதம் என்பது, நலிந்தவர்களை ஒதுக்குகின்ற, ஒரு புறக்கணிப்புக் கூட்டத்தின் சுவரில் உள்ள இடைவெளியைத் திறக்கும், குழு யுக்தியாகும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 16, இச்சனிக்கிழமையன்று தான் சந்தித்த இத்தாலிய கூட்டுறவு கழகங்களின் ஏழாயிரம் உறுப்பினர்களிடம் கூறினார்.     

இத்தாலிய கூட்டுறவு கழகங்களின் கூட்டமைப்பு தொடங்கப்பட்டதன் நூறாம் ஆண்டை முன்னிட்டு, அதன் ஏழாயிரம் உறுப்பினர்களை, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கூட்டமைப்பு, தனிமனிதக் கோட்பாட்டுச் சோதனைகளையும், கட்டுப்பாடற்ற பொருளாதாரத்தோடு தொடர்புடைய தன்னலத்தையும் தவிர்ப்பதற்கு உதவுகின்றது என்று கூறினார். ஏனெனில், இந்தக் கூட்டமைப்பு, திருஅவையின் சமூகக் கோட்பாட்டால் உந்தப்பட்டு செயல்படுகின்றது என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.    

உண்மையான செல்வம் உறவுகளில்

இலாபங்களின் அடிப்படையில் அல்லாமல், உறவுகளின் அடிப்படையைக் கொண்டிருக்கின்ற கூட்டுறவு கண்ணோட்டம், இவ்வுலகின் மனநிலைக்கு எதிராகச் செல்கின்றது என்பதைக் கோடிட்டு காட்டியத் திருத்தந்தை, நமது உண்மையான செல்வம், வெறும் பொருள்களில் அல்ல, மாறாக, உறவுகளில் உள்ளது என்பதை கண்டுணர்வதன் வழியாக மட்டுமே, பணம் என்ற தெய்வத்தால் ஆளப்படாமல் அமைகின்ற ஒரு சமுதாயத்தில் வாழ்கின்ற, மாற்று வழிகளை நம்மால் கண்டுகொள்ள முடியும் என்று கூறினார். பணம் என்ற சிலைவழிபாடு, நம்மை ஏமாற்றி, மனிதமற்ற மற்றும் அநீதியான நிலையில் இருத்தும் எனவும் திருத்தந்தை தெரிவித்தார்.  

கூட்டுறவின் நன்மை

வாழ்வை நரகமாக்கும் தனிமையிலிருந்து விடுதலை பெறுவதற்கு கூட்டுறவு, மிக முக்கியமானதாகவும், வெளிப்படையான பலனைத் தருவதாகவும் உள்ளது என்றும், மனிதர் தனிமையை உணரும்போது, நரகத்தை அனுபவிக்கின்றார் என்றும், அதேநேரம், தான் கைவிடப்படவில்லை என்பதை உணரும்போது, எல்லாவிதமான இன்னல்களையும், மனத்தளர்வுகளையும் எதிர்கொள்வதற்கு அவரால் இயலும் என்றும், திருத்தந்தை கூறினார். எனவே, கூட்டுறவு செய்யும் அற்புதம், குழுவாகச் செயல்படும் யுக்தியாகும் என்றும், கூட்டுறவுத் திட்டங்களில் பெண்கள் சேர்க்கப்பட வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.    

1891ம் ஆண்டில் திருத்தந்தை 13ம் சிங்கராயர் அவர்கள் எழுதிய, Rerum Novarum என்ற திருமடலால் உந்தப்பட்டு, இத்தாலிய கூட்டுறவு கழகங்களின் கூட்டமைப்பு, 1919ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது

16 March 2019, 15:34