ஐரோப்பிய மிதிவண்டி கழத்தினரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் ஐரோப்பிய மிதிவண்டி கழத்தினரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

விளையாட்டில் மனிதரின் நற்பண்புகள் வளர்க்கப்பட வேண்டும்

மிதிவண்டி விளையாட்டு, பொறுமை, துணிவு, ஒருங்கமைவு, பொதுநலப் பண்பு, குழு உணர்வு போன்ற நற்பண்புகளைச் சிறப்பாக வலியுறுத்துகின்றது

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கடவுளின் சாயலாகவும் பாவனையாகவும் உருவாக்கப்பட்ட மனிதரின் ஆற்றல்கள் அனைத்திற்கும் சான்று பகருமாறு, ஐரோப்பிய மிதிவண்டி கழகத்தினரிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று கேட்டுக்கொண்டார்.

ஐரோப்பிய மிதிவண்டி கழத்தின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொள்கின்ற பிரதிநிதிகளை, மார்ச் 09, இச்சனிக்கிழமையன்று, வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனஉறுதி, தியாகம், தன்னலமறுப்பு ஆகிய பண்புகளை, விளையாட்டு கற்பிப்பதால், அப்பண்புகள், மிகச் சிறப்பாக வளர்க்கப்பட்டு, ஊக்குவிக்கப்படுவதற்கு, அது எவ்வாறு உதவ முடியும் என்பதை எடுத்துச் சொன்னார்.

வாழ்வதன் மகிழ்வையும், முடிவை எட்டுகையில் அதில் உண்மையான திருப்தியையும், ஆர்வமுடன் வெளிப்படுத்துவதற்கு, விளையாட்டு, ஒரு வாய்ப்பாக மாறுகிறது எனவும் உரைத்த திருத்தந்தை, மிதிவண்டி விளையாட்டு மற்றும் அதன் நற்பண்புகள் பற்றியும் விளக்கினார்.

மிதிவண்டி விளையாட்டு

நீண்ட தூரம் மற்றும் கஷ்டமான இடங்களில் ஏறும் முயற்சியில் பொறுமை, குறிப்பிட்ட தொலைவில் விரைந்தோடுதல் அல்லது அடுத்தவரை முந்துதலில் துணிச்சல், விதிமுறைகளை மதிப்பதில் ஒருங்கமைவு, பொதுநலப் பண்பு, குழு உணர்வு போன்ற சில நற்பண்புகளை, மிதிவண்டி விளையாட்டு சிறப்பாக வலியுறுத்துகின்றது என்றும் உரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மிதிவண்டி விளையாட்டுப் போட்டிகள், பெரும்பாலும் சாலைகளில் அதிகமாக இடம்பெறுகின்றன, அச்சமயங்களில் அவ்வீரர்களைக் காணும்போது, குழு முழுவதும் எவ்வாறு சேர்ந்து உழைக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும் என்றும், திருத்தந்தை கூறினார்.

மிதிவண்டி விளையாட்டில் சிறந்து விளங்கிய பலர், தங்கள் பணிக்காலத்தில், மனஉறுதி மற்றும் தோழமையுணர்வு பண்புகளைக் கொண்டிருந்து, கடவுளின் சாயலாகவும் பாவனையாகவும் உருவாக்கப்பட்ட மனிதரின் ஆற்றல்கள் அனைத்திற்கும் சான்று பகர்ந்துள்ளதை அறிய முடிகின்றது என்றுரைத்த திருத்தந்தை, புதிய தலைமுறைகள், இந்த விளையாட்டின் நல்ல கலாச்சார மரபுகளை இழந்துவிடாமல் இருப்பதில் கவனம் செலுத்துமாறும், ஐரோப்பிய மிதிவண்டி கழத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 March 2019, 16:05