தேடுதல்

இரத்த புற்றுநோய் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு உதவும் இத்தாலிய தேசிய அமைப்புடன்..... இரத்த புற்றுநோய் தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு உதவும் இத்தாலிய தேசிய அமைப்புடன்.....  

நோயைக் குணமாக்குவது, மனிதரை குணமாக்குவதாகும்

நோயைக் குணப்படுத்துவதற்காக, மனிதரின் உயிரியல் கூறுகள் பற்றி அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மருத்துவ சிகிச்சை என்பது, நோயின் துன்பமான நேரங்களில் நோயாளரோடு இருப்பதாகும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நோய்களால் துன்புறும் மக்களின் வேதனைகளைக் குறைக்கும் நோக்கத்தில் இடம்பெற்றுவரும் ஆராய்ச்சிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை, திருஅவை ஊக்கப்படுத்துகிந்றது மற்றும் பாராட்டுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் இத்தாலிய தேசிய அமைப்பிடம், இச்சனிக்கிழமையன்று கூறினார்.

இரத்த புற்றுநோய் தொடர்புடைய நோய்களால் (leukaemia-Lymphoma, Myeloma) பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு உதவும் இத்தாலிய தேசிய அமைப்பு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, மார்ச் 02, இச்சனிக்கிழமையன்று, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில், அந்த அமைப்பின் ஏறத்தாழ ஆறாயிரம் உறுப்பினர்களைச்  சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

AIL எனப்படும் இந்த தன்னார்வ அமைப்பினர், கடந்த ஐம்பது ஆண்டுகளாக, புற்று நோயாளர்களுக்கு மிக நெருக்கமாக இருந்து, மனத்தாராளத்துடன் ஆற்றிவரும் உதவிகளையும், இந்நோயாளர்களுக்கு, திருஅவைப் பணியாளர்கள் ஆற்றிவரும் ஆன்மீக மற்றும் உடன்பிறந்த உணர்வு சாட்சியங்களையும் பாராட்டி, நன்றி தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதரைக் குணமாக்குவது

மருத்துவர்கள், உயிரியல் ஆய்வாளர்கள், பரிசோதனை நிலையங்களில் பணியாற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் பணிகள் பற்றி எடுத்துரைத்த திருத்தந்தை, ஆன்மீக அளவிலும் வெறுமையை உணரும் நோயாளர்களுக்கு, உடல் அளவில் மட்டுமல்லாமல், உடல் மற்றும் ஆன்மீக முறைகளிலும் உதவ வேண்டும் என கேட்டுக்கொண்டார். நோயைக் குணமாக்குவது என்பது, உடல் உறுப்பையோ அல்லது திசுக்களையோ குணமாக்குவது அல்ல, மாறாக, மனிதரைக் குணமாக்குவதாகும் எனவும் திருத்தந்தை கூறினார்.

நம் ஆண்டவர் மனித சமுதாயத்திற்கு வழங்கியுள்ள மாபெரும் கொடை பற்றிக் கூறும், சீராக் நூலிலிருந்து (சீராக்.17,1-13) வாசிக்கப்பட்ட, இந்நாள் திருப்பலியின் வாசகம் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, ஆண்டவர், மனிதரைப் படைத்தபின், அவர்களை, அறிவாலும் கூர்மதியாலும் நிரப்பினார்; நன்மை தீமையையும் அவர்களுக்குக் காட்டினார், அறிவை அவர்களுக்கு வழங்கினார்; வாழ்வு அளிக்கும் திருச்சட்டத்தை அவர்களுக்கு உரிமையாக்கினார் என்று கூறினார்.

நீங்கள் தனியாய் இல்லை

நீண்ட காலமாக புற்றுநோய்களால் துன்புறும் மக்கள், இவ்வுலகிலிருந்து, உறவுகளிலிருந்து மற்றும் அன்றாட வாழ்விலிருந்து பிரித்து வைக்கப்பட்டதாக உணரலாம், அவர்களின் நோய்களும், வழங்கப்படும் சிகிச்சைகளும் எதிர்காலம் பற்றிய கேள்வியை எழுப்பலாம், ஆயினும், இவர்கள், தனியாக இல்லை, வேதனைகளை அனுபவித்து சிலுவையில் இறந்த ஆண்டவர் அவர்களுக்கு அருகில் இருக்கின்றார் என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்நோயாளர்களின் துன்ப காலத்தில் இவர்களுக்கு அருகில் இருக்கும் பல மக்கள், இயேசு மற்றும் நோயாளரின் அன்னையாகிய, அன்னை மரியின் பிரசன்னம் மற்றும் ஆறுதலின் காணக்கூடிய அடையாளமாக உள்ளனர் எனவும் திருத்தந்தை ஆறுதல் தெரிவித்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 March 2019, 15:17