தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையின்போது..........200319 புதன் மறைக்கல்வியுரையின்போது..........200319  (Vatican Media)

தெற்கு ஆப்ரிக்காவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவருக்கு செபம்

ஆப்ரிக்காவின் தென்பகுதியைத் தாக்கிய இடாய் புயலில், ஏறத்தாழ ஆயிரம் பேர் இறந்துள்ளதுடன், பல்லாயிரக்கணக்கானோர் குடியிருப்புக்களை இழந்துள்ளது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஆப்ரிக்காவின் தென்பகுதியிலுள்ள மொசாம்பிக், ஜிம்பாப்வே மற்றும், மலாவி நாடுகளில் வீசிய ‘இடாய்’ கடும் புயல் மற்றும் வெள்ளத்தால் பெருமளவு உயிர்ச் சேதங்களும், பேரழிவுகளும் ஏற்பட்டுள்ளவேளை, பாதிக்கப்பட்டுள்ள இந்த நாடுகளின் மக்களுடன், தன் அருகாமையையும் ஆதரவையும், ஆறுதலையும் தெரிவிக்கிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் இப்புதன் பொது மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘அண்மை பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் இறைஇரக்கத்திற்கு ஒப்படைப்பதோடு, இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிகளுக்காகவும் விண்ணப்பிக்கின்றேன்’, என்று கூறினார்.

கடந்த வாரத்தில், மொசாம்பிக் நாட்டின் Beira துறைமுக நகரில், மணிக்கு 170 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயல் மற்றும் கனமழை, பெருமளவு சேதங்களை ஏற்படுத்தியுள்ளதையடுத்து, அதில் உயிரிழந்தவர்களுக்காக, அந்நாட்டில் இப்புதன் முதல் மூன்று நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகின்றது. மேலும், மொசாம்பிக் அரசுத்தலைவர், இதனை "ஒரு பெரும் மனிதப் பேரழிவு" என்று குறிப்பிட்டுள்ளார். இடாய் புயல், தென் துருவப் பகுதிகளைத் தாக்கிய மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது என ஐ.நாவின் வானிலை மைய அலுவலகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மலாவி நாட்டில், ஏறக்குறைய 9,20,000 பேர் இடாய் புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என, ஐ.நா. உணவு திட்ட அமைப்பு கூறியுள்ளது.

20 March 2019, 15:13