தேடுதல்

Vatican News
 ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் - 170319 ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் - 170319  (Vatican Media)

அனைத்து துன்பங்களுக்கும், தீர்வும், வெற்றியும் உண்டு

துன்பங்கள் தேவையானவை, அதேவேளை, அவை, நாம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு கடந்து செல்ல, உதவிகளாகவும் விளங்குகின்றன – திருத்தந்தையின் மூவேளை செப உரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இஞ்ஞாயிறன்று வழங்கப்பட்ட நற்செய்தியில் இடம்பெறும் இயேசுவின் தோற்ற மாற்றம் நிகழ்ச்சியை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கினார்.

பாடுகள் மற்றும் மரணத்தின் பின்வரும் உயிர்ப்பின் வழியே, வானகத் தந்தை தன் மகனை மகிமைப்படுத்த விழைந்தது குறித்து, இயேசு, தன் சீடர்களுக்கு எடுத்துரைத்து, அவர்களை தயார் செய்ததை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம் என்று கூறியத் திருத்தந்தை, துன்பங்கள் குறித்து, கிறிஸ்தவர்கள் பெற்றிருக்கவேண்டிய கண்ணோட்டம் இங்கு உணர்த்தப்படுகிறது என்று கூறினார்.

துன்பங்கள் தேவையானவை, அதேவேளை, அவை, நாம் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு கடந்து செல்ல, உதவிகளாகவும் விளங்குகின்றன என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.

நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்களுக்கும், தீர்வும், வெற்றியும் உண்டு என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செபத்தின் உதவியோடு, நாமும் இயேசுவுடன் மலைமீது ஏறிச்செல்ல வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார்.

செபித்துக் கொண்டிருந்தபோது, இயேசுவின் முகத்தோற்றம் மாறியது என்பதை லூக்கா நற்செய்தியில் வாசிக்கும் நாம், செபத்தின் வழியாக நாமும் ஒளிர்விக்கப்பட்டு, பிறரையும் ஒளிர்விக்கமுடியும் என்பதை நினைவில் கொண்டு, இத்தவக்காலத்தில், செபத்திற்கு நம் வாழ்வில் தனியொரு இடமளிப்போம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

17 March 2019, 12:53