தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் ஆறு ஆண்டுகள் பணி நிறைவு திருத்தந்தையின் ஆறு ஆண்டுகள் பணி நிறைவு 

திருத்தந்தையின் தலைமைப் பணியில் ஆறு ஆண்டுகள்

ஏழைகள்மீது காட்டும் ஆர்வம், புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் நிலை, கைதிகளைச் சந்திப்பது, குற்றக் கும்பல்களுக்கு எதிராக குரலெழுப்புவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்டுவது, மதங்களிடையே, கிறிஸ்தவ சபைகளிடையே ஒற்றுமைக்கு பாடுபடுவது, உலகில் அமைதியை நிலைநாட்ட முயல்வது...

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி, திருத்தந்தை 16 ம் பெனடிக்ட் அவர்கள் தன் எட்டாம் ஆண்டு தலைமைப் பணியின்போது, திடீரென பதவி விலகியபோது, கத்தோலிக்கர் மட்டுமல்ல, பல்வேறு மதத்தினரும் அதிர்ச்சிக்கு உள்ளாயினர். உடல்நிலையைக் காரணம்காட்டி திருத்தந்தை அவர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, அடுத்து யார் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி, இயல்பாகவே எழுந்தது. வத்திக்கானின் சிஸ்டீன் சிற்றாலயத்தில் கூடிய கர்தினால்கள், கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்களை, அடுத்த திருத்தந்தையாகத் தேர்ந்தெடுத்தபோது, பல்வேறு ஆச்சரியங்கள் அங்குப் பொதிந்திருந்தன. இயேசு சபையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருத்தந்தை என்பதுடன், இவர் அமெரிக்கக் கண்டத்திலிருந்து வரும் முதல் பாப்பிறையுமாவார்.

இந்த புதுத் திருந்தந்தையின்கீழ், திருஅவைப் படிப்பினைகளில், அதாவது, கருக்கலைப்பு முறைகள்,  கற்புடைமை, பெண் அருள்பணியாளர்கள், ஒரேபாலின திருமணங்கள் என்பவற்றில் எவ்வித மாற்றங்களும் இடம்பெறவில்லை, இருப்பினும் அவரின் புதிய அணுகுமுறைகள், பலரை திருஅவையை திருப்பிப் பார்க்க வைத்துள்ளது, பலரை திரும்பி வரவைத்துள்ளது. 

அவரின் நடவடிக்கைகளை உற்று நோக்குபவர்களுக்கே அவர் திருஅவையை எவ்வழியில் எடுத்துச் செல்ல முயல்கிறார் என்பது புரியும். நற்செய்தி அறிவித்தலின் புதிய வழி குறித்து அவர் கூறியுள்ளதே இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நற்செய்தி  அறிவிப்பு என்பது, இறைவனின் கருணையையும் இரக்கத்தையும் அறிவிப்பதாக இருக்கவேண்டும், என எடுத்துரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வார்த்தைகளால் மட்டுமல்ல, வாழ்வு நடவடிக்கைகளாலும் அந்த அறிவித்தல் இடம்பெற வேண்டும் என எடுத்துரைத்து, ஏழைகளையும், புலம்பெயர்ந்தோரையும், நோயுற்றோரையும் தேடிச்சென்று சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

திருத்தந்தையின் அணுகுமுறைகள்

திருத்தந்தையின் சில அணுகுமுறைகளை உற்று நோக்கினோமென்றால், ஒழுக்கநெறிக் கோட்பாடுகள் என்பவை, சட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டவைகளாக இல்லாமல், பகுத்தறிதலின் வழியாகப் பிறந்தவைகளாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார். இதைத்தான் அவரின் Amoris Laetitia என்ற ஏட்டின் 8ம் பிரிவில் காண்கிறோம்.  எந்த திருத்தந்தையும் மேற்கொள்ளாதவகையில், சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை, கிறிஸ்தவ விசுவாசத்தின் மையப்பகுதிக்கு இத்திருத்தந்தை கொண்டுவந்துள்ளது, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. இறைவனின் படைப்பைப் பாதுகாக்கும் பொறுப்புடையவர்கள் என்பதை வலியுறுத்தியே Laudato Si' என்ற சுற்றுமடலை வரைந்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருப்பீடத்தின் சீரமைப்புகள்

திருப்பீடத்தின் அமைப்பு முறைகளில் அவர் கொணர்ந்துள்ள மாற்றங்கள் இந்த ஆறு ஆண்டுகளில் ஏராளம் என கூறலாம். சிறு சிறு அமைப்புக்களை ஒன்றாக இணைத்தது, வத்திக்கான் வங்கியை சீரமைத்தது,  பல்வேறு துறைகளின் பொருளாதார நடவடிக்கைகளை கண்காணிக்க புதிய அமைப்பு ஒன்றை உருவாக்கியது, கர்தினால்கள் நியமனத்தில் அனைத்துக் கண்டங்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கியது, அருள்பணியாளர்களும் ஆயர்களும் இறைமக்களின் பணியாளர்கள் என்ற கருத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருவது, என கடந்த ஆறாண்டு கால சீர்திருத்தங்களை ஒன்றன்பின் ஒன்றாக அடுக்கிக் கொண்டே போகலாம்.

அமைதி முயற்சிகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எளிமையானவர் என்பதும், ஏழைமக்கள் மீது அளவுகடந்த பாசமுள்ளவர் என்பதும், மதங்களிடையே நல்லுறவை வளர்க்க விரும்புபவர் என்பதும் இவ்வுலகம் முழுவதும் அறிந்த ஒன்றே. ஆனால், அவரின்கீழ் திருஅவை ஆற்றியுள்ள அமைதி முயற்சிகள், அதனால் பயனடைந்தவர்கள் உலகிற்குச் சொன்ன பின்னரே தெரியவந்துள்ளது. நல்ல செயல்களுக்கு விளம்பரம் தேவையில்லை என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டவர் நம் திருத்தந்தை. 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் கியூப அரசுத்தலைவர் Raul Castro  அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாட்டிலிருந்து கியூபக் கைதிகள் விடுவிக்கப்படுவதிலும், கியூபாவுக்கு எதிரான அமெரிக்க பொருளாதாரத்தடைகள் அகற்றப்படுவதற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முயற்சியைப் பாராட்டியபோதுதான், திருஅவையின் இரகசிய நல் முயற்சிகள் பலருக்குத் தெரியவந்தன.

1959ம் ஆண்டு முதல் கியூபாவுக்கும், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் இடையே இருந்த பனிப்போர், திருத்தந்தந்தையின் தராத முயற்சியால், 2015ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் முடிவுக்கு வந்தது. இதே கியூபா நாட்டில்தான், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைத் தலைவர் கிறில் அவர்களை, 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தித்து, இரு கிறிஸ்தவ சபைகளுக்கும் இடையே நிலவிய ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான முரண்பாட்டை முடிவுக்குக் கொணர்ந்தார். இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் வழிபாட்டுமுறை தலைவரை ஒரு திருத்தந்தை சந்தித்தது அதுவே முதன்முறை.

இரண்டு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோரை பலிவாங்கி 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருந்த கொலம்பிய நாட்டு உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைகளை ஊக்குவித்ததுடன், 2017ம் ஆண்டு அந்நாட்டில் திருப்பயணம் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அமைதிக்கான ஆவலையும் நாம் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது.

புரிந்து செயல்படுதல்

அரசுச் சட்டங்கள் வழியாக மணமுறிவுப் பெற்று பிரிந்து வாழும் தம்பதியரையும், கருக்கலைப்பு செய்துள்ள தாய்களையும், ஒரே பாலின நாட்டமுடையோரையும் தீர்ப்பிடாமல், அவர்களைப் புரிந்துகொண்டு, அவர்களின் பிரச்சனைகளை உணர நாம் முன்வரவேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கடந்தகால 6 ஆண்டுகளை மொத்தமாக நம் கண்முன் கொணர்ந்து நோக்கும்போது, நமக்குத் தெரிவதெல்லாம், 1936ம் ஆண்டு அர்ஜென்டீனாவில் பிறந்து, இன்று 120 கோடிக்கும் மேற்பட்ட கத்தோலிக்கர்களை வழிநடத்திச் செல்லும் இந்த திருத்தந்தை, ஏழைகள் மீது காட்டும் ஆர்வம், புலம்பெயர்ந்தோரை வரவேற்கும் நிலை, கைதிகளைச் சந்திப்பது, குற்றக் கும்பல்களுக்கு எதிராக குரலெழுப்புவது, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அக்கறை காட்டுவது, மதங்களிடையே, கிறிஸ்தவ சபைகளிடையே ஒற்றுமைக்கு பாடுபடுவது, உலகில் அமைதியை நிலைநாட்ட முயல்வது, குழந்தைகளைக் கண்டதும் வாரியணைத்து முத்தமிடுவது, திருஅவை அதிகாரிகளால் பாலியல் முறைகேடுகளுக்கு உள்ளாக்கப்பட்ட சிறார்களைச் சந்தித்து அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட முயற்சிகளை எடுத்தது, திருஅவையில் இரக்கத்தின் யூபிலி ஆண்டை சிறப்பித்தது, உலக வறியோர் நாளை உருவாக்கியது, உலகில் மரணதண்டனையை எதிர்த்து வருவது, என பல நல்ல நடவடிக்கைகள் வந்து செல்கின்றன.

புனிதர்கள்

எல்லாவற்றிற்கும் முக்கிய நோக்கமாக இருப்பது, நாம் இன்னும் சிறந்ததொரு உலகை படைக்கவேண்டும் என்பதே. இந்த திருத்தந்தையின் காலத்தில்தான் திருத்தந்தையர்கள் 23ம் ஜான், இரண்டாம் ஜான் பால், ஆறாம் பவுல், அன்னை தெரேசா, Euphrasia Eluvathingal, Kuriakose Elias Chavara, Joseph Vaz, பேராயர் Óscar Romero, போர்த்துக்கல் பாத்திமாவில் அன்னைமரியை காட்சி கண்ட Jacinta Marto மற்றும் Francisco Marto, புனித குழந்தை தெரேசாவின் பெற்றோர் Marie-Azélie Guérin Martin மற்றும் Louis Martin  உட்பட, 49 இறைஊழியர்கள் மற்றும் அவர்களின் 841 உடன் உழைப்பளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.

கடந்த ஆறு ஆண்டுகால பணியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குடும்பம், இளையோர் பற்றிய உலக ஆயர்கள் மாமன்றங்கள் உட்பட, மூன்று உலக ஆயர்கள் மாமன்றங்களையும், திருஅவையில் சிறியோர் பாதுகாப்பு என்ற தலைப்பில் ஒரு மாமன்றத்தையும்  நடத்தியுள்ளார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆறு ஆண்டுகளில் உலகின் நாற்பது நாடுகளில், 27 திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார்.

அசிசியின் புனித பிரான்சிஸ்

2013ம் ஆண்டு மார்ச் 13ம் தேதி, திருஅவையின் 266வது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரண்டு நாட்களுக்குப்பின், அதாவது, மார்ச் 16ம் தேதி, ஏறத்தாழ 600 பத்திரிகையாளர்களை புனித ஆறாம் பவுல் அரங்கில் சந்தித்தார். அப்போது அவர் கூறிய வார்த்தைகள் முக்கியமனவை. 'நான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவ் வேளையில் என் அருகில் இருந்த பிரேசில் நாட்டு கர்தினால் Claudio Hummes அவர்கள் எனக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டு, ஏழைகளை மறந்துவிடாதீர்கள் என்றார். ஏழைகள் என்றதும் எனக்கு முதலில் நினைவுக்கு வந்தவர் அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களே. அவர் அமைதியின் மனிதர், ஏழ்மையின் மனிதர், மற்றும் இயற்கையைப் பாதுகாத்த மனிதர்',

அமைதி, ஏழ்மை, இயற்கை பாதுகாப்பு ஆகிய துறைகளில் திருத்தந்தையின் பணிகள் தொடர்வதை கண்கூடாகப் பார்க்கிறோம்.

13 March 2019, 15:31