தேடுதல்

Vatican News
அருள்சகோதரி Maria Concetta Esu அவர்களுக்கு  பாப்பிறை பதக்கம் ஒன்றையும், சான்று பத்திரம் ஒன்றையும் வழங்கிய திருத்தந்தை அருள்சகோதரி Maria Concetta Esu அவர்களுக்கு பாப்பிறை பதக்கம் ஒன்றையும், சான்று பத்திரம் ஒன்றையும் வழங்கிய திருத்தந்தை  (Vatican Media)

இறைவனுக்காக 24 மணிநேரம் - பாவ மன்னிப்பு திருவழிபாடு

ஆப்ரிக்க அன்னையரின் பேறுகாலத்தில் உதவி செய்து, ஆயிரக்கணக்கான குழந்தைகள் சுகமாகப் பிறந்திட உதவியுள்ள அருள்சகோதரியை பாராட்டி, அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, பாப்பிறை பதக்கம் ஒன்றையும், சான்று பத்திரம் ஒன்றையும் வழங்கினார் திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

தன் புதன் மறைக்கல்வி உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம் வெள்ளிக்கிழமை மாலை உரோம் நேரம் 5 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் துவக்கி வைக்கப்படவிருக்கும் ‘இறைவனுக்காக 24 மணிநேரம்’ என்ற பாவ மன்னிப்பு திருவழிபாடு குறித்து எடுத்துரைத்தார். 'நானும் உன்னை தீர்ப்பிடேன்' என்ற இயேசுவின் வார்த்தைகளை மையமாகக்கொண்டு இடம்பெறும் இந்த 24 மணி நேர செப வழிபாடு, ஒவ்வொரு கோவிலிலும் இடம்பெறும். இந்த வழிபாடு, ஒவ்வோர் ஆண்டும், தவக்காலத்தின் நான்காவது ஞாயிறுக்கு முந்தைய வெள்ளி, மற்றும், சனி ஆகிய நாள்களில் இடம்பெறுகிறது.

மேலும், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை வழங்கிய பின்னர் திருத்தந்தை,  ஆப்ரிக்காவில் 60 ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் 85 வயது நிரம்பிய அருள்சகோதரி Maria Concetta Esu அவர்களைப் பாராட்டி, அவர்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக, பாப்பிறை பதக்கம் ஒன்றையும், சான்று பத்திரம் ஒன்றையும் வழங்கினார்.

ஆப்ரிக்க அன்னையரின் பேறுகாலத்தில் உதவி செய்து, ஆயிரக்கணக்கான குழந்தைகள் சுகமாகப் பிறந்திட உதவியுள்ள இந்தச் சகோதரியை, தன் மத்திய ஆப்ரிக்க குடியரசுப் பயணத்தின்போது தான் சந்தித்ததாகக் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ். தங்கள் வாழ்க்கைச் சான்று வழியாக இறையரசின் விதைகளைத் தூவி, பிறர் வாழ்வில் ஒளியூட்டும் இத்தகைய மறைப்பணியாளர்களுக்கு ஊக்கத்தையும் வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,   இந்த அருள்சகோதரி Concetta Esu அவர்கள், ஆப்ரிக்காவில் தொடர்ந்துவரும் பணிகளில், நம் செபத்தின் உதவியுடன் துணை நிற்போம் எனவும் கேட்டுக்கொண்டார்.

27 March 2019, 12:03