புனித திருத்தந்தை 23ம் ஜான் திருவுருவம் புனித திருத்தந்தை 23ம் ஜான் திருவுருவம்  

லெபனான் புதிய ஆலய அர்ச்சிப்புக்கு திருத்தந்தை செய்தி

புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், லெபனான் நாட்டில், படைவீரர்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும், கிழக்குப் பகுதியின் திருப்பீடத் தூதராகவும் பணியாற்றினார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

லெபனான் நாட்டின் ஷாமா எனுமிடத்தில் கார்மேல் அன்னை மரியா மற்றும் புனித திருத்தந்தை 23ம் ஜான் ஆகியோரின் பெயரால் கட்டப்பட்டுள்ள ஒரு ஆலயத்தின் அர்ச்சிப்புக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரால், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

லெபனான் நாட்டில் பணியாற்றும் படைவீரர்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாக இருக்கும் பேராயர் சாந்தோ மார்ச்சியானோ அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், இப்புதிய ஆலயம், செபிப்பதற்கும், அமைதியைக் கொணர்வதற்கும் ஒரு கருவியாக விளங்கவேண்டும் என்று திருத்தந்தை தன் ஆவலை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆலய அர்ச்சிப்பை முன்னின்று நடத்திய பேராயர் மார்ச்சியானோ அவர்கள், அமைதியை உறுதி செய்வது, இராணுவத்தினருக்கு அளிக்கப்பட்டுள்ள தலையாயக் கடமை என்று, தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

புனித திருத்தந்தை 23ம் ஜான் அவர்கள், லெபனான் நாட்டில், படைவீரர்களுக்கு ஆன்மீக வழிகாட்டியாகவும், கிழக்குப் பகுதியின் திருப்பீடத் தூதராகவும் பணியாற்றினார் என்பதை, பேராயர் மார்ச்சியானோ அவர்கள், தன் மறையுரையில் நினைவு கூர்ந்தார்.

லெபனான் நாட்டிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நல்லெண்ணத் தூதராகப் பணியாற்றிய கர்தினால் ரொன்கால்லி அவர்கள், 23ம் ஜான் என்ற திருத்தந்தையாக மாறி, தற்போது மீண்டும் இந்நாட்டிற்கு, ஒரு புனிதராக, பாதுகாவலராக வருகை தந்துள்ளார் என்று பேராயர் மார்ச்சியானோ அவர்கள், எடுத்துரைத்தார்.

மார்ச் 3ம் தேதி, திருத்தந்தை 23ம் ஜான் அவர்களின் உருவச் சிலை, அர்ச்சிக்கப்பட்டது என்பதும், இந்த உருவம், புதிதாக எழுப்பப்பட்டுள்ள ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 March 2019, 15:15