புனித பேதுரு பேராலயத்தில் அருள்பணியாளர், துறவியரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் புனித பேதுரு பேராலயத்தில் அருள்பணியாளர், துறவியரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

புனித பேதுரு பேராலயத்தில் திருத்தந்தை சந்திப்பு

அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைகளின் உறுப்பினர்கள் ஆகியோரை புனித பேதுரு பேராலயத்தில் திருத்தந்தை சந்தித்தார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மொராக்கோ நாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்டிருக்கும் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள், ஞாயிறன்று காலை 8.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 1 மணிக்குத் துவங்கின. திருப்பீடத் தூதரகத்தின் அதிகாரிகளையும், பணியாளர்களையும் சந்தித்து நன்றி கூறி விடைபெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்து 21 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள 'சமூகப்பணி கிராம மையம்' என்ற நிறுவனத்திற்குச் சென்றார். பிறரன்பு புதல்வியர் என்ற துறவு சபை சகோதரிகளால் நடத்தப்படும் இந்நிறுவனத்தில், கல்வி, மழலையருக்குத் தங்குமிடம், நலவாழ்வு உதவிகள் என்ற பல பணிகள் நடைபெறுகின்றன. இம்மையத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நோயுற்ற குழந்தைகளையும், அவர்களின் பெற்றோரையும் சந்தித்து ஆசீர் வழங்கியபின், அங்கிருந்து 20.5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள புனித பேதுரு பேராலயம் நோக்கிச் சென்றார்.

1919ம் ஆண்டு கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டு, 1921ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி திருநிலைப்படுத்தப்பட்ட இந்தப் பேராலயம், ரபாட் நகரின் மையத்தில் அமைந்துள்ளது. இங்கு, அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைகளின் உறுப்பினர்கள் ஆகியோரை திருத்தந்தை சந்தித்தார்.

இச்சந்திப்பின் ஆரம்பத்தில், அருள்பணி ஜெர்மெயின் அவர்களும், அருள்சகோதரி மேரி அவர்களும் தங்கள் சாட்சியங்களைப் பகிர்ந்துகொள்ள, திருத்தந்தை அங்கிருந்தோருக்கு தன் உரையை வழங்கினார்.

அருள்பணியாளர், துறவியர், கிறிஸ்தவ சபைப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை மேற்கொண்ட இச்சந்திப்பிற்கு உள்ளூர் நேரம் பகல் 12 மணியளவில், திருப்பீடத் தூதரகம் வந்தடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்தூதரகத்தில், மொராக்கோ நாட்டு ஆயர்களோடும், தன்னோடு பயணம் செய்த திருப்பீட அதிகாரிகளோடும் மதிய உணவருந்தினார்.

மதிய உணவுக்குப்பின், இளவரசர் மௌலாய் அப்தெல்லா விளையாட்டரங்கத்திற்கு சென்று, அங்கு கூடியிருந்த கத்தோலிக்கர்களுக்கு திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

31 March 2019, 15:33