லொரெத்தோ பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை லொரெத்தோ பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை 

லொரெத்தோ பசிலிக்கா வளாகத்தில் திருத்தந்தை உரை

அன்னை மரியாவின் வீடு, குடும்பங்கள், இளையோர் மற்றும் நோயாளிகளின் வீடும் ஆகும். ஆழ்ந்த அமைதி மற்றும் பக்தி நிறைந்த மரியாவின் இந்த வீட்டில், அனைவரும் நம்பிக்கையைப் பெற இயலும்

மேரி தெரேசா - வத்திக்கான்

 ‘அருள்மிகப் பெற்றவரே வாழ்க, ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’ என்று கபிரியேல் தூதர் மரியாவுக்கு உரைத்த வார்த்தைகள், இந்த திருத்தலத்தில் சிறப்பாக ஒலிக்கின்றன என்று தனது உரையைத் தொடங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தனக்கு இனிய வரவேற்பளித்த எல்லாருக்கும் நன்றி. இந்தப் புனித வீடு, இளையோரின் வீடு, ஏனெனில் இங்குதான், அருள்மிகப் பெற்ற இளையவரான கன்னி மரியா, புதிய தலைமுறைகளிடம் தொடர்ந்து பேசுகிறார், தங்களின் அழைப்பைத் தேர்ந்துகொள்ளும் தேடலில், ஒவ்வோர் இளையோருடனும் அவர் உடன்செல்கிறார். இதனாலே, கிறிஸ்து வாழ்கிறார், அவரே நம் நம்பிக்கை” என்ற, இளையோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட, திருத்தூது அறிவுரை ஏட்டில் இந்த இடத்தில் கையெழுத்திட விரும்பினேன். ஆண்டவரின் பிறப்பு அறிவிக்கப்பட்ட நிகழ்வில், உயிரூட்டமுள்ள அழைப்பின் மூன்று முக்கிய தருணங்கள் வெளிப்படுகின்றன. உலக ஆயர்கள் மாமன்றத்திலும் இவை கோடிட்டுக் காட்டப்பட்டன. முதலாவது இறைவார்த்தைக்கும், இறைத்திட்டத்திற்கும் செவிமடுத்தல், இரண்டாவது, தெளிந்துதேர்தல், மூன்றாவது, தீர்மானம் எடுத்தல்.

இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல்

இறைவார்த்தைக்குச் செவிமடுத்தல் என்பது, “மரியா, அஞ்சவேண்டாம்; இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர்” (லூக்.1,30-31) என்று சொன்ன வானதூதரின் வார்த்தைகளில் வெளிப்படுகின்றது. கடவுள் தம்மைப் பின்செல்ல அழைக்கும்போது, அவரே முதலில் முயற்சி எடுக்கிறார். கிறிஸ்தவ வாழ்வுக்கு அல்லது சிறப்பான அர்ப்பண வாழ்வுக்கு விடுக்கும் அழைப்பானது, கடவுள் இளையோரின் வாழ்வில் தலையிட்டு, தம் அன்பை இளையோருக்குக் கொடையாக வழங்குவதாகும். எனவே நாம் கடவுளின் குரலுக்கு, விருப்பமுடன் செவிமடுக்கத் தயாராக இருக்க வேண்டும். கடவுளின் இச்செயலுக்கு ஒத்துழைப்பு வழங்க, அன்னை மரியா இளையோரை அழைக்கிறார்

தெளிந்து தேர்தல்

அடுத்து, ஒவ்வோர் அழைப்பும், தெளிந்து தேர்தலாகும். “இது எப்படி நிகழும்?  என்று, மரியா வானதூதரிடம் கேட்ட வார்த்தைகளில் இது, வெளிப்படுகின்றது. மரியாவின் கேள்வி விசுவாசக் குறைவால் கேட்கப்பட்டது அல்ல, மாறாக, கடவுளின் வியப்புகளைக் கண்டறிவதற்கு அவரிடமிருந்த ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. எனவே மரியாவின் இந்த மனநிலையே, ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டும்.

தீர்மானம் எடுப்பது

தீர்மானம் எடுப்பது, ஒவ்வொரு கிறிஸ்தவ வாழ்வின் பண்பைக் குறித்துக்காட்டுவதாகும்.  “நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று, மரியா, வானதூதரிடம் சொன்ன, ஆகட்டும் என்பது, இறைவார்த்தை, மனிதஉரு எடுத்த நிகழ்வின் வழியாக, கடவுளின் மீட்புத்திட்டத்தில் நிறைவேறியது. ஆகட்டும் என்பது, கடவுளின் திட்டத்தில் முழு நம்பிக்கை வைத்து, அது செயல்படுவதற்குக் கையளிப்பதாகும். எனவே, மரியா, ஒவ்வோர் அழைப்பிற்கும், எடுத்துக்காட்டாகவும், தூண்டுதலாகவும் இருக்கிறார். தங்களின் வருங்காலம் பற்றிய தேடலில், இளையோர் அன்னை மரியாவில் உதவியைப் பெற முடியும்.

புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் மையம்

தங்களின் அழைத்தலைத் தெளிந்துதேர்ந்துகொள்ள முயற்சிக்கும் இளையோர், மரியாவின் பள்ளியாகிய லொரேத்தோவுக்கு வரலாம். லொரெத்தோவிலுள்ள புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் மையம், இதற்கு உதவும் என நம்புகிறேன். அதேநேரம், இளையோர் தங்களின் அழைத்தலைத் தெளிந்துதேர்ந்து கொள்வதற்கு வசதியாக, இந்த திருத்தலம் மாலை மற்றும் இரவு நேரங்களில் அதிக நேரம் திறந்து வைக்கப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.

அத்திருத்தலத்தில் மேய்ப்புப்பணியாற்றும் கப்புச்சின் சபை அருள்பணியாளர்களிடம் இவ்வாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, லொரெத்தோ மரியா இல்லம், குடும்பங்களின் வீடு, நோயாளிகளின் வீடு என்றும் கூறினார். இந்த உலகிற்கு அமைதி மற்றும் நல்வாழ்வின் நற்செய்தி பணியாற்றும், இத்திருத்தலத்துடன் தொடர்புடைய எல்லாரும், மரியா வழியாக, இறைவனிடம் தங்களின் பணியை அர்ப்பணியுங்கள் என்றார். இறுதியில், மற்றவரை ஏற்றல், மன்னித்தல், அன்புகூர்தல் ஆகியவற்றின் அடிப்படையில், அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வு கொண்ட பாதையில் அனைவரும், குறிப்பாக இளையோர் பின்செல்ல அன்னை மரியின் உதவிக்காகச் செபித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இவ்வுரைக்குப் பின்னர் மூவேளை செபத்தையும் செபித்தார்  திருத்தந்தை பிரான்சிஸ்.

டுவிட்டர்

இந்த உரையை மையப்படுத்தி, இத்திங்களன்று டுவிட்டரிலும் செய்தி வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். வரவேற்றல், மன்னித்தல், பிறரை மதித்தல், தன்னையே வழங்கும் அன்பு ஆகியவற்றின் அடிப்படையில், அமைதி மற்றும் உடன்பிறந்த உணர்வுப் பாதையைப் பின்பற்ற, ஒவ்வொருவருக்கும், குறிப்பாக இளையோர்க்கு, புனித கன்னி மரி உதவுவாராக என்ற சொற்களை, தன் டுவிட்டரில் திருத்தந்தை பதிவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 March 2019, 15:02