திருநீற்றுப் புதன் திருப்பலியில் திருநீறைப் பெற்றுக்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் திருநீற்றுப் புதன் திருப்பலியில் திருநீறைப் பெற்றுக்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை வழங்கிய திருநீற்றுப் புதன் மறையுரை

நாம் மீண்டும் தந்தையின் இல்லத்திற்குத் திரும்புவது, தவக்காலப் பயணத்தின் முக்கிய இலக்கு – திருத்தந்தையின் மறையுரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

திரும்பி வருதல் நம் வாழ்வின் மிக அவசியமானத் தேவை என்ற முக்கியமான கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 6, புதனன்று மாலை வழங்கிய தவக்கால மறையுரையின் மையக் கருத்தாக வழங்கினார்.

திருத்தந்தையின் பாவமன்னிப்பு பவனியும் திருப்பலியும்

மார்ச் 6, புதன் மாலை 4.30 மணிக்கு, உரோம் நகர், அவெந்தீனோ எனுமிடத்தில் அமைந்துள்ள புனித ஆன்செல்ம் கோவிலிலிருந்து புறப்பட்ட பாவமன்னிப்பு பவனியை வழிநடத்தியத் திருத்தந்தை, பவனியின் இறுதியில், புனித சபீனா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை வழங்கினார்.

"எக்காளம் ஊதி எச்சரியுங்கள்; புனிதமான உண்ணா நோன்புக்கென நாள் குறியுங்கள்" (யோவேல் 2:15) என்று யோவேல் நூலில் கூறப்பட்டுள்ள வரிகளை தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எக்காளத்தின் ஒலி, நம் செவிகளைத் துளைத்துச் சென்று, நம் கவனத்தை ஈர்க்கிறது என்று கூறினார்.

விழித்தெழச் செய்யும் எக்காள ஒலி

எவ்வித நோக்கமும் இன்றி அலைந்து திரியும் நம் உள்ளங்களை விழித்தெழச் செய்வதற்கு உதவும் எக்காள ஒலி, நம்மை, நின்று, நிதானித்து சிந்திக்கவும், வாழ்வின் அடிப்படை உண்மைகளை உணரவும், அழைப்பு விடுக்கிறது என்று, திருத்தந்தை தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

திசைமாறித் திரியும் நம் வாழ்வுப் பயணத்திற்கு மீண்டும் ஒரு நோக்கத்தையும், இலக்கையும் அளிப்பது, தவக்காலம் என்பதை தன் மறையுரையில் தெளிவுபடுத்தியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நாம் மீண்டும் தந்தையின் இல்லத்திற்குத் திரும்புவது, இந்தப் பயணத்தின் முக்கிய இலக்கு என்பதை வலியுறுத்தினார்.

சாம்பலைப்போல் நிலையற்றது

திருநீற்றுப் புதனன்று, நம் தலையில் பூசப்படும் சாம்பல், நம் சிந்தனைகளை நிறைப்பனவற்றை சுட்டிக்காட்டும் ஓர் அடையாளம் என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, நம் வாழ்வை ஆக்கிரமிக்கும் பல விடயங்கள், இந்தச் சாம்பலைப்போல் நிலையற்றது என்பதை நாம் உணர்வதற்கு, இது ஓர் அடையாளம் என்று குறிப்பிட்டார்.

எவ்வித வெளிவேடமும், நடிப்பும் இல்லாமல், இந்த தவக்காலத்தில் நாம் மேற்கொள்ளக்கூடிய தர்மம், செபம், உண்ணாநோன்பு ஆகிய மூன்று முக்கிய முயற்சிகளைக் குறித்து, நற்செய்தி நமக்கு நினைவுறுத்துகிறது என்பதை, திருத்தந்தை தன் மறையுரையில் கூறினார்.

திசைகாட்டும் கருவியாகச் செயலாற்றும் உள்ளம்

நம் உள்ளம் ஒரு திசைகாட்டும் கருவியாகச் செயலாற்றுகிறது என்பதை, தன் மறையுரையின் இறுதிப் பகுதியில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள், "உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்" (மத். 6:21) என்று இயேசு கூறிய சொற்களை நினைவுறுத்தி, நம் உள்ளம் விரும்பும் விடயங்களை மீள்பார்வை செய்வதற்கு, தவக்காலம் அழைப்பு விடுக்கிறது என்று எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

07 March 2019, 15:32