தேடுதல்

ஞாயிறு மூவேளை செப உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - 240319 ஞாயிறு மூவேளை செப உரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - 240319  

நம் ஆன்மீக சோம்பலால் இழக்கப்படும் வாய்ப்புகள்

திருத்தந்தை : மனம் திரும்புவதற்கு நமக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை நாம் உதறித் தள்ளினால், அத்தகையதொரு வாய்ப்பு, மீண்டும் கிடைக்காமல் போகலாம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

மனம் திரும்பலுக்கு உரிய வாய்ப்பு, கால வரையறையின்றி, கணக்கு வழக்கின்றி கொடுக்கப்படுவதல்ல என்றும், அது எப்போது கிடைக்கின்றதோ அதை உடனே பற்றிக் கொள்ளவேண்டியது அவசியம் என்றும், இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலியில் வழங்கப்பட்ட நற்செய்தி வாசகத்தில் கூறப்பட்டுள்ள காய்க்காத அத்தி மர உவமை குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மனம் திரும்புவதற்கு நமக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை நாம் உதறித் தள்ளினால், அத்தகையதொரு வாய்ப்பு, மீண்டும் கிடைக்காமல் போகலாம் என்ற எச்சரிக்கையையும் முன்வைத்தார்.

கனிகளை எதிர்பார்த்து வந்தபோது, மரத்தில் ஒன்றுமில்லாததைக் கண்டு, அம்மரத்தை வெட்டிவிட தோட்ட உரிமையாளர் கட்டளையிட்டதையும், இன்னும் ஓராண்டு காத்திருந்து பார்ப்போம் என, அந்த மரத்திற்காக, தோட்டத் தொழிலாளர் பரிந்து பேசியதையும் குறித்து விளக்கமளித்த திருத்தந்தை, தோட்ட உரிமையாளரை இறைத்தந்தையாகவும், இயேசுவை நமக்காகப் பரிந்துபேசும் தோட்டத் தொழிலாளராகவும், மரத்தை, நம் அக்கறையற்ற நிலையாகவும் உருவகப்படுத்திக் காண்பித்து, நாம் மனம் திரும்புவதற்கு, இறைவனின் இரக்கம் வழங்கும் கால அவகாசத்தைச் சுட்டிக்காட்டினார்.

மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், மற்றவர்களுக்கு எதையும் வழங்காமல், தன்னலத்திலேயே முடங்கிப்போய் எவ்வித பலனுமின்றி வாழும் மனிதர்கள் மீது சிறப்புக் கவனம் செலுத்தி, அவர்களின் வழிகளை மாற்றமுடியும் என இயேசு கூறுவதை, அத்திமரத்திற்கான அவரின் பரிந்துரையில் நாம் காண்கிறோம் என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் மனம் திரும்ப வேண்டியதன் தேவை, இறைவனின் இரக்கம், அவரின் பொறுமை, நம் ஆன்மீக சோம்பலால் இழக்கப்படும் வாய்ப்புகள், இறை இரக்கத்தை தவறாக பயன்படுத்தாமல் இதய சுத்தத்துடன் பதிலளித்தல் போன்றவைகள் குறித்தும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தவக்காலத்தில் நமக்கு விடப்படும் மனம் திரும்பல் குறித்த அழைப்புக்கு நன்முறையில் பதிலளித்து, இறை இரக்கத்தில் நம்பிக்கைக்கொண்டு மீண்டும் எழுந்து நடக்கவேண்டிய தேவையை உணர்ந்து, பிறருடன் நல் உறவுகளை வளர்த்து செயல்பட வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 March 2019, 13:00