தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ் 

அர்ஜென்டீனா மக்களும், ஆயர்களும் திருத்தந்தைக்கு வாழ்த்து

எளிமையாக வாழ்வது, அயர்வின்றி உழைப்பது, எப்போதும் மக்களைச் சந்திக்க தயாராக இருப்பது போன்ற நற்பண்புகளால், எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

தேவைகளைக் குறைத்து, எளிமையாக வாழ்வது, அயர்வின்றி உழைப்பது, எப்போதும் மக்களைச் சந்திக்க தயாராக இருப்பது போன்ற நற்பண்புகளால் எடுத்துக்காட்டான வாழ்வை வாழ்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை எண்ணி, அர்ஜென்டீனா மக்களும், ஆயர்களும் மகிழ்வதாக, அந்நாட்டு ஆயர்கள் செய்தியொன்றை அனுப்பியுள்ளனர்.

தங்கள் 117வது நிறையமர்வுக் கூட்டத்தில் பங்கேற்று வரும் அர்ஜென்டீனா ஆயர்கள், மார்ச் 13, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப்பணியில் ஆறு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையொட்டி, அவருக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளனர்.

அர்ஜென்டீனாவின் புவனஸ் அயிரஸ் பேராயராக பணியாற்றிய வேளையில், திருத்தந்தையாகத் தெரிவு செய்யப்பட்ட கர்தினால் ஹோர்கே மாரியோ பெர்கோலியோ அவர்களை, தங்கள் தலத்திருஅவைக்கு வழங்கியதற்காக, அந்நாட்டு ஆயர்கள், இறைவனுக்கு, தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

ஆறு ஆண்டுகளுக்கு முன், கர்தினால் பெர்கோலியோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் என்ற பெயருடன் தன் தலைமைப் பணியைத் துவக்கியபோது, உரோம் நகருக்கு வெளியே மேற்கொண்ட முதல் பயணம், லாம்பதூசா தீவுக்கு அமைந்ததை, தங்கள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள ஆயர்கள், புறக்கணிக்கப்பட்ட மக்களுடன் தன் அருகாமையையும், ஆதரவையும் திருத்தந்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருவதற்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

பாலியல் முறைகேடுகள் என்ற வேதனையானச் சூழலை, திருஅவை சந்தித்து வரும் வேளையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உறுதியுடன், அதே வேளையில், அமைதியுடன், இந்தப் பிரச்சனையைச் சந்தித்து வரும் பாங்கு, பலருக்கும் உந்து சக்தியாக அமைந்துள்ளது என்பதை, அர்ஜென்டீனா ஆயர்களின் செய்தி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 March 2019, 15:41