மொராக்கோ நாட்டிற்கு திருத்தூதுப்பயணத்தைத் துவக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் மொராக்கோ நாட்டிற்கு திருத்தூதுப்பயணத்தைத் துவக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தையின் 28வது திருத்தூதுப் பயணம் துவங்கியது

தன் 27வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபியில் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து, மற்றோர் இஸ்லாமிய நாடான மொராக்கோவிற்கு தன் 28வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் துவக்கினார்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வாண்டு பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை, 27வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, ஐக்கிய அரபு அமீரகத்தின், அபுதாபி நகரில் மேற்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தொடர்ந்து, மற்றோர் இஸ்லாமிய நாடான மொராக்கோவிற்கு இச்சனிக்கிழமை காலை தன் 28வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் துவக்கினார். உரோம் நகர் ஃபியூமிச்சீனோ பன்னாட்டு விமானத்தளத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பயணம், உள்ளூர் நேரம் 10.45 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 3 மணி 15 நிமிடங்களுக்குத் துவங்கியது. ஃபியூமிச்சீனோ விமான நிலையம் அமைந்துள்ள போர்த்தோ சாந்தா ருஃபீனா மறைமாவட்டத்தின் ஆயர் ஜீனோ ரெயாலி அவர்களும், ஏனைய திருஅவை அதிகாரிகளும் விமான நிலையம் வந்திருந்து, திருத்தந்தையை வழியனுப்பி வைத்தனர். திருத்தந்தையுடன், திருப்பீட அதிகாரிகள் சிலரும், பல்வேறு ஊடகங்களின் 76 பிரதிநிதிகளும் பயணம் செய்தனர்.

மொராக்கோ நாட்டு தலைநகர் ரபாட்டுக்கும் உரோமுக்கும் இடையே உள்ள 1901 கிலோ மீட்டர் தூரத்தை, A320 ஆலித்தாலிய விமானத்தில் 3மணி நேரம் 15 நிமிடங்களில் கடந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னுடன் பயணம் செய்த சமூகத் ஊடகத்துறையினரை சந்தித்து தன் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன், விமானத்திலேயே மதிய உணவையும் அருந்தினார். இத்தாலியிலிருந்து புறப்பட்டு, ஃபிரான்ஸ், இஸ்பெயின் ஆகிய நாடுகளைக் கடந்து, உள்ளூர் நேரம் பிற்பகல் 2 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் மாலை 6 மணி 30 நிமிடங்களுக்கு, மொராக்கோ தலை நகரைச் சென்றடைந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

2013ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி திருஅவையின் தலைமைப் பணியைத் தொடங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த ஆறு ஆண்டுகளில் 41 நாடுகளில் 27 திருத்தூதுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார். இவ்வாண்டு பிப்ரவரி மாத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்ட திருத்தந்தை, 28வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, இஸ்லாமிய நாடான மொராக்கோவில் காலடி பதித்தார். மொராக்கோ அரசர், மற்றும் அந்நாட்டு ஆயர்கள் விடுத்த அழைப்பின்பேரில்,  மார்ச் 30, 31, அகிய இருநாள்கள் அந்நாட்டில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ். “நம்பிக்கையின் பணியாளர்” என்ற கருப்பொருளை மையப்படுத்தி இத்திருத்தூதுப் பயண நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 March 2019, 15:01