தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

வாழ்வுக்கு எப்போதும் ஆதரவு வழங்கும் திருஅவை

மனித குலத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகள், தீவிரமான குற்றங்கள் என்றாலும், அவற்றைத் தடுப்பதற்கு, மரண தண்டனை ஒரு தீர்வு அல்ல - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித உயிர் என்பது, நாம் பெற்றுக்கொண்ட அனைத்து கொடைகளிலும், தலையானதும், முக்கியமானதும் ஆகும் என்றும், மற்ற கொடைகள், உரிமைகள் அனைத்திற்கும், அதுவே ஊற்றாக விளங்குகிறது என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஓர் உலக மாநாட்டிற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

பெல்ஜியம் நாட்டின் பிரஸ்ஸல்ஸ் (Brussels) நகரில், பிப்ரவரி 26ம் தேதி முதல், மார்ச் முதல் தேதி முடிய நடைபெறும், மரண தண்டனைக்கு எதிரான 7வது உலக மாநாட்டிற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஸ்பானிய மொழியில் அனுப்பிய காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

மரண தண்டனை ஒரு தீர்வு அல்ல

மனித குலத்திற்கு எதிராக நிகழ்த்தப்படும் கொடுமைகள், தீவிரமான குற்றங்கள் என்றாலும், அவற்றைத் தடுப்பதற்கு, மரண தண்டனை ஒரு தீர்வு அல்ல என்று, தன் செய்தியில் கூறும் திருத்தந்தை, தவறு செய்தவர்கள், தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டு, மனம் திருந்தி வாழும் வாய்ப்பையும், மரண தண்டனை அழித்து விடுகிறது என்று எடுத்துரைத்தார்.

மரண தண்டனையை ஒழிக்கும் சட்டங்கள் தேவை

நாம் வாழும் இன்றைய உலகில் மரண தண்டனையை நடைமுறைப்படுத்தாத நாடுகளின் எண்ணிக்கை கூடிவருவது, ஒரு நேர்மறையான அடையாளம் எனினும், நாடுகள் அனைத்தும், மரண தண்டனையை தங்கள் சட்டங்களிலிருந்து நீக்குவதும் ஒரு முக்கியமான முயற்சி என்று, திருத்தந்தை, தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

வாழ்வுக்கு ஆதரவாக திருஅவை

வாழ்வுக்கு எப்போதும் ஆதரவு வழங்கி வந்துள்ள கத்தோலிக்கத் திருஅவை, தன் எண்ணங்களில் முதிர்ச்சி பெற்று, தற்போது, மரண தண்டனைக்கு எதிராக தன் மறைக்கல்வி கருத்துக்களை வெளியிட்டுள்ளது என்பதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் காணொளிச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மரண தண்டனையை முற்றிலும் ஒழிக்கும் நோக்கத்துடன் கூடி வந்துள்ள அனைத்து நாட்டு பிரதிநிதிகளுடன் தான் செபத்தில் ஒன்றித்திருப்பதாகக் கூறியுள்ள திருத்தந்தை, இந்த முயற்சி, மனிதர்களுக்கு உரிய மாண்பை வழங்கும் மற்றொரு  முயற்சியாக அமையவேண்டும் என்ற வாழ்த்துடன், தன் காணொளிச் செய்தியை, நிறைவு செய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2019, 14:51