தேடுதல்

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் 

திருத்தந்தை பிரான்சிஸ் - அபு தாபியில் பிப்ரவரி 3-5

ஐக்கிய அரபு அமீரகத் திருத்தூதுப் பயணம், கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் ஒருவர் அரேபிய தீபகற்பத்திற்குச் செல்லும் முதல் திருத்தூதுப் பயணம்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 27 வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை, பிப்ரவரி 03, இஞ்ஞாயிறு பகல் ஒரு மணிக்குத் தொடங்குகிறார்.

கத்தோலிக்கத் திருஅவையின் தலைவர் ஒருவர் அரேபிய தீபகற்பத்திற்குச் செல்லும் முதல் திருத்தூதுப் பயணமாக அமைந்துள்ள இப்பயணத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபு தாபிக்குச் செல்கிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

‘மனித உடன்பிறந்த நிலை’ என்ற தலைப்பில், பிப்ரவரி 3, இஞ்ஞாயிறன்று தொடங்கும் பன்னாட்டு பல்சமய கருத்தரங்கில் கலந்துகொள்வது, திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.  

உரோம் நகரிலிருந்து அபு தாபிக்குத் புறப்படும் திருத்தந்தை, அபு தாபி நகர் பன்னாட்டு விமான நிலையத்தை, அந்நாட்டு நேரம் இரவு பத்து மணிக்குச் சென்றடைவார். அங்கு அதிகாரப்பூர்வ வரவேற்பைப் பெற்று, அங்கிருந்து 28.5 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Al Mushrif  மாளிகைக்குச் சென்று உறங்கச் செல்வார் திருத்தந்தை.

பிப்ரவரி 04, வருகிற திங்கள் உள்ளூர் நேரம் காலை 8.45 மணிக்கு, தனியாக திருப்பலி நிறைவேற்றிய பின்னர், ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத்தலைவர் மாளிகை சென்று, அரசின் வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்வார் திருத்தந்தை. பின்னர் வாரிசு இளவரசர் Sheikh Mohammed bin Zayed bin Sultan Al-Nahyan அவர்களைச் சந்தித்துப் பேசுவார்.

திங்கள் மாலை 5 மணிக்கு Sheikh Zayed பெரிய மசூதி சென்று, முஸ்லிம் அவை உறுப்பினர்கள், அந்த அவையின் மூத்தவர்களைச் சந்திக்கும் திருத்தந்தை, நிறுவனரின் நினைவு அரங்கத்தில் பல்சமயப் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றுவார்.

பிப்ரவரி 05, வருகிற செவ்வாய் காலை 9.15 மணிக்கு புனித யோசேப் பேராலயம் சென்ற பின்னர், Zayed விளையாட்டு நகரில் திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ். இத்திருப்பலியில், ஒரு இலட்சத்து 35 ஆயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாலையில் அந்நாட்டிலிருந்து பிரியாவிடை பெற்று உரோம் நகருக்குப் புறப்படுவார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 February 2019, 15:47