"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்ற அரங்கம் "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் நடைபெறவிருக்கும் ஆயர்கள் மாமன்ற அரங்கம் 

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டத்தில் நிகழ்வன

உரைகள், குழு விவாதங்கள், சாட்சியத்துடன் கூடிய செபங்கள், மன்னிப்பு மன்றாட்டு, ஆகியவை, "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டத்தில் இடம்பெறுகின்றன

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிப்ரவரி 21ம் தேதி, இவ்வியாழன் முதல், 24 ஞாயிறு முடிய, வத்திக்கானில், உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் வருகை தந்துள்ள ஆயர்கள், மற்றும், பல்வேறு பிரதிநிதிகள் பங்கேற்கும், "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற முக்கிய கூட்டத்தின் அட்டவணையும், இக்கூட்டத்திற்குத் தேவையான பின்னணி விவரங்கள் அடங்கிய ஒரு குறிப்பேடும் பிப்ரவரி 20, இப்புதனன்று வெளியாயின.

பிப்ரவரி 21, வியாழன்

பிப்ரவரி 21, வியாழன் காலை, 9 மணிக்கு ஒரு செப வழிபாட்டுடன் துவங்கும் முதல் அமர்வில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துவக்க உரையாற்றியபின், "ஆடுகளின் மணம். அவர்களின் வேதனையை அறிந்து, அவர்கள் காயங்களை ஆற்றுவது, மேய்ப்பர்கள் பணியின் இதயம்" என்ற தலைப்பில், கர்தினால் Luis Antonio Tagle அவர்கள் முதல் உரையாற்றுகிறார்.

"திருஅவை, போர்க்கள மருத்துவமனை. பொறுப்பை ஏற்பது" என்ற தலைப்பில், பேராயர் Charles Jude Scicluna அவர்கள், இரண்டாவது அமர்வில் வழங்கும் உரையைத் தொடர்ந்து, குழுக்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன.

பிற்பகலில் நடைபெறும் மூன்றாவது அமர்வில், கர்தினால் Rubén Salazar Gómez அவர்கள், "இக்கட்டான தருணத்தில் திருஅவை - மோதல்களைச் சந்தித்து, உறுதியுடன் செயலாற்றுவது" என்ற தலைப்பில் வழங்கும் உரையைத் தொடர்ந்து, மீண்டும், குழுக்களில் விவாதங்கள் தொடர்கின்றன

மாலையில், பொது அமர்வில், குழு விவாதங்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபின், சாட்சியங்களுடன் கூடிய மாலை செப வழிபாடு நிகழ்கிறது. இத்துடன் முதல் நாள் நிகழ்வுகள் முடிவுக்கு வருகின்றன.

பிப்ரவரி 22, வெள்ளி

பிப்ரவரி 22ம் தேதி வெள்ளியன்று, கர்தினால்  Oswald Gracias அவர்கள் வழங்கும், "ஒருங்கிணைந்த நிலை: அனுப்பப்படுதல்", கர்தினால்  Blase Joseph Cupich அவர்கள் வழங்கும் "அனைவரும் இணைந்து பொறுப்பேற்றல்", Linda Ghisoni என்ற முனைவர் வழங்கும் "இணைந்து செயலாற்றுதல்" என்ற மூன்று உரைகளும், குழு விவாதங்களும் நடைபெறுகின்றன.

பிப்ரவரி 23, சனிக்கிழமை

பிப்ரவரி 23, சனிக்கிழமையன்று, அருள்சகோதரி Veronica Openibo அவர்கள் வழங்கும் "திறந்த மனநிலை: உலகிற்கு அனுப்பப்படுதல்", கர்தினால் Reinhard Marx அவர்கள் வழங்கும், "நம்பிக்கையாளர்கள் சமுதாயத்தில், ஒளிவு மறைவற்ற நிலை", முனைவர் Valentina Alazraki அவர்கள் வழங்கும் "அனைத்து மக்களோடும் தொடர்பு" என்ற உரைகளும், குழு விவாதங்களும் நடைபெறுகின்றன.

சனிக்கிழமை மாலை, 5.30 மணிக்கு, திருத்தந்தை உட்பட, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும், பாவ மன்னிப்பு வழிபாட்டில் பங்கேற்கின்றனர்.

பிப்ரவரி 24, ஞாயிறன்று காலை, 9.30 மணிக்கு, இறுதித் திருப்பலியும், திருத்தந்தை வழங்கும் இறுதி உரையும் இந்தக் கூட்டத்தை நிறைவுக்குக் கொணர்கின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 February 2019, 15:53