தேடுதல்

Vatican News
மனித வர்த்தகத்திற்கு எதிரான திருத்தந்தையின் செபக்கருத்து மனித வர்த்தகத்திற்கு எதிரான திருத்தந்தையின் செபக்கருத்து 

மனித வர்த்தகத்திற்கு எதிராக திருத்தந்தையின் செபக்கருத்து

மனித வர்த்தகம், கட்டாயப் பாலியல் கொடுமை, வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரை தாராள மனதுடன் வரவேற்கும் வரத்திற்காக செபிப்போமாக - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"அடிமைத்தனம் வேறு ஏதோ ஒரு காலத்தில் நடைபெற்றது அல்ல, அது நம் காலத்திலும் தொடர்ந்து வருகிறது. மனித குலத்திற்கு எதிரான இக்குற்றத்திற்கு நாமும் ஏதோ ஒரு வழியில் உடந்தையாக இருக்கிறோம். எனவே, இக்குற்றத்திற்கும் நமக்கும் தொடர்பில்லை என்று நம்மால் கை கழுவ முடியாது" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 7 இவ்வியாழனன்று வெளியிட்ட ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும், திருத்தந்தையின் செபக்கருத்துக்களை, காணொளி வடிவில் வழங்கிவரும், இயேசு சபையினரின், செபத்தின் திருத்தூதுப் பணிக்குழு, இவ்வியாழனன்று வெளியிட்ட "The Pope Video" காணொளியில், நவீன அடிமைத்தனம், மனித வர்த்தகம் ஆகியவற்றை மையப்படுத்தி, திருத்தந்தை, தன் கருத்துக்களை வழங்கியுள்ளார்.

முற்காலத்தில் இருந்ததைவிட, இன்னும் சொல்லப்போனால், அக்காலத்தைவிட அதிகமான வடிவங்களில், அடிமைத்தனம் நம்மிடையே பரவியுள்ளது என்பதை, தன் காணொளிச் செய்தியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனித வர்த்தகம், கட்டாயப் பாலியல் கொடுமை, வன்முறை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோரை தாராள மனதுடன் வரவேற்கும் வரத்திற்காக செபிப்போமாக என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இக்காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

மனித வர்த்தகம் மற்றும் அடிமைத்தனம் ஆகிய கொடுமைகளுக்கு உள்ளான புனித ஜோசப்பின் பக்கித்தா (Josephine Bakhita) அவர்கள் இறையடி சேர்ந்த பிப்ரவரி 8ம் தேதி, மனித வர்த்தகத்திற்கு எதிராக விழிப்புணர்வு மற்றும் செபங்களை மேற்கொள்ளும் உலக நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை வழங்கியுள்ள செபக்கருத்து, இக்கொடுமையைக் குறித்து நம்மை சிந்திக்க அழைக்கிறது.

07 February 2019, 14:34