காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை காணொளிச் செய்தி வழங்கும் திருத்தந்தை 

துபாய் உச்சிமாநாட்டிற்கு திருத்தந்தையின் காணொளிச் செய்தி

உலக தலைவர்களின் கூட்டத்தில், சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து விவாதங்கள் இடம்பெற உள்ள அதேவேளை, அதற்கு முன்னர் நன்னெறி சார்ந்த சீர்கேடுகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் – திருத்தந்தையின் விண்ணப்பம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஒருவருக்கொருவர் காட்டும் மதிப்புடனும், திறந்த மனதுடனும், நாம் ஒன்றிணைந்து வளரும்போது, இவ்வுலகின் பாலைவனங்களைக்கூட பூஞ்சோலைகளாக மாற்றமுடியும் என கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் பிப்ரவரி 10, இஞ்ஞாயிறு முதல் 12, இச்செவ்வாய் முடிய இடம்பெறும் உலக அரசுகளின் உச்சிமாநாட்டிற்கு காணொளிச் செய்தியொன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அண்மையில், தான் ஐக்கிய அரபு அமீரகத்தில் மேற்கொண்ட பயணத்தின்போது, தன் வேர்களை மறந்துவிடாமல், வருங்காலம் குறித்த நடவடிக்கைகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டுவரும் ஒரு நவீன நாட்டை தான் கண்டதாகக் கூறியுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகம், சகிப்புத்தன்மை, உடன்பிறந்த உணர்வு, ஒருவருக்கொருவர் காட்டும் மதிப்பு, விடுதலை ஆகியவற்றில் முன்னோக்கிய முயற்சிகளை எடுத்துவருவது குறித்தும் தன் செய்தியில் மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

எத்தகைய ஒரு வருங்காலத்தைக் கட்டியெழுப்பப் போகிறோம் என்ற நோக்கத்துடன்,  அரசியல் சவால்கள், பொருளாதர வளர்ச்சி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நவீன தொழில் நுட்பங்களின் பயன்பாடு போன்றவை குறித்து உலக தலைவர்களின் துபாய் கூட்டம் விவாதிக்க உள்ளதைக் குறித்து தன் பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்து விவாதங்கள் இடம்பெற உள்ள அதேவேளை, அதற்கு முன்னர் நன்னெறி சார்ந்த சீர்கேடுகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும் என இக்காணொளிச் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 February 2019, 12:10