தேடுதல்

செபத்தில் ஆழ்ந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் செபத்தில் ஆழ்ந்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

வத்திக்கான் கூட்டத்திற்காக செபிக்க திருத்தந்தை அழைப்பு

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு என்ற கூட்டம், மேய்ப்புப்பணி சார்ந்த பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் சக்தி மிகுந்த ஒரு செயல்பாடாக அமையவேண்டும் என்று செபியுங்கள்" - திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு என்ற தலைப்பில், பிப்ரவரி 21, வருகிற வியாழன் முதல், 24 வருகிற ஞாயிறு முடிய வத்திக்கானில் நடைபெறவிருக்கும் ஒரு முக்கியமான கூட்டத்திற்காக, செபிக்கும்படி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியை இத்திங்களன்று வெளியிட்டார்.

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு என்ற கூட்டத்திற்காக செபிக்கும்படி உங்களை அழைக்கிறேன். இன்றைய காலக்கட்டத்தில் எழுந்துள்ள ஓர் அவசர சவாலுக்கு, மேய்ப்புப்பணி சார்ந்த பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் சக்தி மிகுந்த செயல்பாடாக இந்நிகழ்வு அமையவேண்டும் என்று செபியுங்கள்" என்ற சொற்கள் திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாகப் பதிவாகியிருந்தன.

இதே விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 17, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியிலும் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், மனித சமுதாயத்திற்குத் தேவையான அமைதியை வளர்க்க கிறிஸ்தவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை, இஞ்ஞாயிறு வெளியிட்ட டுவிட்டர் செய்தி வழியே திருத்தந்தை கூறியிருந்தார்.

"கிறிஸ்தவர்கள், தாங்கள் வாழும் சமுதாயங்களில் துவங்கி, அமைதியை வளர்க்கின்றனர்" என்பது, திருத்தந்தை வெளியிட்ட டுவிட்டர் செய்தியாக அமைந்தது.

திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் கர்தினால்கள் குழு, பிப்ரவரி 18, இத்திங்களன்று காலை, தங்கள் 28வது கூட்டத்தை, திருத்தந்தையுடன் இணைந்து, வத்திக்கானில் துவங்கியுள்ளது. இக்கூட்டம், பிப்ரவரி 20, இப்புதன் முடிய நீடிக்கும்.

மேலும், உரோம் நகர மேயர் விடுத்துள்ள ஓர் அழைப்பை ஏற்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகர மன்றத்தினரைச் சந்திக்க, மார்ச் 26ம் தேதி, நகர மன்றத்திற்குச் செல்வார் என்று வத்திக்கான் செய்தித் தொடர்பாளர், அலெசாந்த்ரோ ஜிசொத்தி அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 February 2019, 15:47