தேடுதல்

Vatican News
பங்களாதேசின் தீ விபத்து பங்களாதேசின் தீ விபத்து 

எம் புகழைக் காப்பாற்றிக்கொள்ளும் சோதனையிலிருந்து விடுவித்தருளும்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற தலைப்பில் நடைபெறும் வத்திக்கான் கூட்டத்தில், 130க்கும் அதிகமான நாடுகளிலிருந்து 190 பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" என்ற தலைப்பில் பிப்ரவரி 21, இவ்வியாழன் முதல், வத்திக்கானில் நடைபெற்றுவரும் முக்கிய கூட்டத்தையொட்டி, டுவிட்டர் செய்திகளையும் வெளியிட்டு வருகிறார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆண்டவரே, எம்மையும், எம் புகழையும் காப்பாற்றிக்கொள்வதற்கு ஏற்படும் சோதனையிலிருந்து எம்மை விடுவித்தருளும், எம் தவறுகளை ஏற்கவும், இறைமக்கள் அனைவருடன், ஒன்றித்து தாழ்மையான மற்றும் தெளிவான பதில்களைத் தேடவும் எமக்கு உதவி செய்தருளும் என்ற சொற்கள், பிப்ரவரி 22, இவ்வெள்ளியன்று திருத்தந்தையின் டுவிட்டரில் இடம்பெற்றிருந்தன.    

உலகெங்கிலும் உள்ள 114 ஆயர் பேரவைகளின் தலைவர்கள், இருபால் துறவு சபைகளின் உலகத் தலைவர்கள் 22 பேர், திருப்பீடத்தின் உயர் அதிகாரிகள் 14 பேர், மற்றும் திருத்தந்தையால் சிறப்பான அழைப்பு பெற்றோர் என, 190 பிரதிநிதிகள் இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்துகொள்கின்றனர். இக்கூட்டம், பிப்ரவரி 24 ஞாயிறன்று காலை திருப்பலியுடன் நிறைவு பெறும்.

மேலும், பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்ற தீ விபத்தில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டோருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வையும், செபங்களையும் தெரிவித்து, தந்திச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். திருத்தந்தையின் இச்செய்தியை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அந்நாட்டிற்கு அனுப்பியுள்ளார். தலைநகர் டாக்காவில் இப்புதனன்று இடம்பெற்ற தீ விபத்தில், இதுவரை 78 பேர் இறந்துள்ளனர் என கூறப்படுகின்றது.

22 February 2019, 15:29