தேடுதல்

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் "திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் 

"திருஅவையில் சிறியோரின் பாதுகாப்பு" கூட்டம் குறித்து டுவிட்டர்

"இந்நாள்களில் தூய ஆவியார் நம்மைத் தாங்கி நிற்குமாறு அவரிடம் கேட்போம்." வத்திக்கான் கூட்டத்தையொட்டி திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

"இந்நாள்களில் தூய ஆவியார் நம்மைத் தாங்கி நிற்குமாறு அவரிடம் கேட்போம். அவ்வழியில், நாம் இன்னும் விழிப்புணர்வு பெறவும், தூய்மையாகவும், இந்தத் தீமையை மாற்றுவோம்" என்ற சொற்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வியாழன் வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.

"இறைவா, மற்றவரின் வேதனைகளை எங்கள் உள்ளங்களில் ஏற்கவிடாமல் தடுக்கிறோம். எங்கள் இதயங்களைத் திறந்து, அவற்றை உமது சாயலில் உருவாக்கியருளும்" என்ற சொற்களை திருத்தந்தை தன் இரண்டாவது டுவிட்டர் செய்தியாகப் பதிவு செய்திருந்தார்.

மேலும், தவக்காலத்தையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிடும் செய்தியை, பிப்ரவரி 26, வருகிற செவ்வாயன்று, ஒருங்கிணைத்த மனித முன்னேற்றத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள், செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

"கடவுளின் மக்கள் வெளிப்படுவதைக் காண்பதற்காகப் படைப்பே பேராவலோடு காத்திருக்கிறது" (உரோமையர் 8:19) என்ற மையக்கருத்துடன் திருத்தந்தையின் தவக்காலச் செய்தி வெளியாகிறது.

இதற்கிடையே, லைபீரியா நாட்டின் Gbanipea எனுமிடத்தில் சுரங்கங்களில் நிகழ்ந்த மண்சரிவில் இறந்தோரின் நினைவாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுதாபத் தந்தியொன்றை, அந்நாட்டின் ஆயர் Anthony Fallah Borwah அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

Gbanipeaயில் நிகழ்ந்த மண்சரிவால் உயிரிழந்தோருக்காக செபிப்பதாகவும், தங்கள் உறவுகளை இழந்து தவிப்போருக்கு ஆறுதலையும் செபங்களையும் தெரிவிப்பதாகவும், இந்த துன்பகரமான நேரத்தில் மக்களைக் காக்கப் பணியாற்றுவோருக்கு தன் செபங்களை தெரிவிப்பதாகவும் திருத்தந்தையின் சார்பில் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இத்தந்தியை அனுப்பியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 February 2019, 15:04