தேடுதல்

லொரேத்தோ மரியன்னை திருத்தலம் லொரேத்தோ மரியன்னை திருத்தலம்  

திருத்தந்தையின் அறிவுரை மடல் லொரேத்தோவில் வெளியீடு

மார்ச் 25, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் புகழ்பெற்ற மரியன்னை திருத்தலமான லொரேத்தோவுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிறரன்பின் அளவுகோலை வலியுறுத்தும் ஒரு கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தியாக இப்புதனன்று வெளியிட்டார்.

"நீங்கள் கடவுளை நம்பினால், அனைவரோடும் நீதியுடன் வாழவேண்டும், 'பிறர் உங்களுக்குச் செய்ய வேண்டும் என விரும்புகிறவற்றை எல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்' (மத். 7,12) என்ற பொன்னான சட்டத்தைப் பின்பற்றவேண்டும்" என்ற சொற்களை திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியில் பதிவு செய்திருந்தார்.

மேலும், மார்ச் 25, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பு திருநாளன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியின் புகழ்பெற்ற மரியன்னை திருத்தலமான லொரேத்தோவுக்கு (Loretto) மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று வத்திக்கான் செய்தித் துறைத் தலைவர் அலெசாந்த்ரோ ஜிசொத்தி அவர்கள் அறிவித்துள்ளார்.

இளையோரை மையப்படுத்தி, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம், வத்திக்கானில் நடைபெற்ற, உலக ஆயர்கள் மாமன்றத்தின் தொடர்ச்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியுள்ள திருத்தூது அறிவுரை மடலை, அன்னையின் திருத்தலத்தில் அவர் வெளியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 3, வருகிற ஞாயிறன்று, உரோம் மறைமாவட்டத்தின் வித்தெர்போ பகுதியில் அமைந்துள்ள புனித கிரிஸ்ப்பீனோ பங்குத் தளத்திற்கு மேய்ப்புப்பணி பயணம் செல்கிறார் என்று, உரோம் மறைமாவட்டம் அறிவித்துள்ளது.

2013ம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்றபின்னர், உரோம் மறைமாவட்டத்தின் ஆயர் என்ற முறையில், 17 பங்குத்தளங்களுக்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதும், மார்ச் 3ம் தேதி அவர் மேற்கொள்ளவிருப்பது இந்த மறைமாவட்டத்தில் அவர் மேற்கொள்ளும் 18வது மேய்ப்புப்பணி பயணம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 February 2019, 15:11