தேடுதல்

திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்  

வாழ்வைக் குறித்து பரந்த கண்ணோட்டம் கொண்டிருக்க...

"இவ்வுலகைச் சார்ந்த தோற்றங்களிலிருந்து விலகியிருப்பது, விண்ணுலகிற்காக நம்மையே தயாரிப்பதற்கு மிகவும் அவசியம்"

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இவ்வுலகைத் தாண்டி, மறு உலகில் நம் கவனத்தைப் பதிக்கும் ஓர் அழைப்பை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் செய்தி வழியே, இப்புதனன்று விடுத்திருந்தார்.

"இவ்வுலகைச் சார்ந்த தோற்றங்களிலிருந்து விலகியிருப்பது, விண்ணுலகிற்காக நம்மையே தயாரிப்பதற்கு மிகவும் அவசியம்" என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் பக்கத்தில் பிப்ரவரி 13, இப்புதனன்று வெளியாயின.

"வர்த்தகத் துறையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வோர், வாழ்வைக் குறித்த பரந்துபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும்" என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 'நற்செய்தியின் மகிழ்வு' என்ற திருத்தூது அறிவுரை மடலில் கூறிய கருத்தை, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு அனுப்பிய செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

"நம்பிக்கையால் உள்ளொளி பெறும் வர்த்தக முயற்சிகளின் மதிப்பீடுகள்" என்ற தலைப்பில், உரோம் நகரில், பிப்ரவரி 12, இச்செவ்வாயன்று நடைபெற்ற ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு கர்தினால் பரோலின் அவர்கள் அனுப்பிய செய்தி, "வாழ்வின் பரந்துபட்ட பொருளை வர்த்தகத்தில் இணைக்க" என்ற மையக்கருத்துடன் அமைந்திருந்தது.

அயலவருக்கு, குறிப்பாக, வறியோருக்கு நாம் ஆற்றும் பணிகளே நம் இறுதி நாள் தீர்வில் முக்கிய இடம்பெறும் (மத். 25: 35-45) என்பதைக் கூறும் நற்செய்திப் பகுதியை, கர்தினால் பரோலின் அவர்கள் தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 February 2019, 14:40