தேடுதல்

கத்தோலிக்க-ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பன்னாட்டு இறையியல் உரையாடல் குழு கத்தோலிக்க-ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பன்னாட்டு இறையியல் உரையாடல் குழு 

மத்திய கிழக்கு, அமைதியின் விடியலுக்குச் சாட்சியாகத் திகழ...

மத்தியக் கிழக்குப் பகுதி, போரின் நிலமாகத் தொடர்ந்து இருக்க இயலாது, மாறாக, அப்பகுதி அமைதியின் நிலமாக மாற வேண்டும்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

கடவுளின் மீட்புத் திட்டத்தில் தனித்துவமிக்க இடத்தைக் கொண்டிருக்கும் மத்தியக் கிழக்குப் பகுதி, போரின் நீண்ட இரவுக்குப் பின்னர், அமைதியின் விடியலுக்குச் சாட்சியாகத் திகழ வேண்டுமென்று, தான் தொடர்ந்து செபிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

கத்தோலிக்கத் திருஅவை மற்றும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளின் பன்னாட்டு இறையியல் உரையாடல் குழுவின் உறுப்பினர்களை, இவ்வெள்ளி காலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்குழுவில் பலர், மத்தியக் கிழக்கு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்தவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, துன்புறும் அப்பகுதி விசுவாசிகளுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தார்.

மத்தியக் கிழக்குப் பகுதி, போரின் நிலமாகத் தொடர்ந்து இருக்க இயலாது, மாறாக, அப்பகுதி அமைதியின் நிலமாக மாற வேண்டும் என்றும், அதிகாரம் மற்றும் வறுமையின் மகளாகிய போர், சட்டம் மற்றும் நீதியின் மகளாகிய அமைதிக்கு வழிவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அப்பகுதியில் வாழும் கிறிஸ்தவ சகோதரர், சகோதரிகள், குடிமக்களாக அங்கீகரிக்கப்பட்டு, சம உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என்ற தன் ஆவலையும் வெளியிட்டார்.

இந்த பன்னாட்டு இறையியல் உரையாடல் குழு, திருமணம் என்ற அருளடையாளம் பற்றி இவ்வாரத்தில் கலந்துரையாடியிருப்பது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, நல்லிணக்கம் நிறைந்த சூழலில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல்கள், கிறிஸ்துவின் மணமகளாம் கடவுளின் பிள்ளைகள், காயங்கள் மற்றும் பிரிவினைகளின்றி, முழு ஒன்றிப்பின் அழகை அனுபவிக்க உதவும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.

நம் கிறிஸ்தவ சபைகளில் ஏராளமான புனிதர்களின் வாழ்வுமுறைகள், அந்தந்த நிலங்களில் அமைதியின் வித்துக்களாக உள்ளன என்றும், தற்போது விண்ணில் மலர்ந்துள்ள அப்புனிதர்கள், முழு ஒன்றிப்பை நோக்கிய நம் பயணத்திற்கு ஆதரவளிக்கின்றனர் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூறினார்.

கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளின் பன்னாட்டு இறையியல் உரையாடல் குழு, 2003ம் ஆண்டு சனவரியில் உருவாக்கப்பட்டது. இதில் காப்டிக் ஆர்த்தடாக்ஸ், சீரோ ஆர்த்தடாக்ஸ், அர்மேனிய அப்போஸ்தலிக்க சபை, எத்தியோப்பிய ஆர்த்தடாக்ஸ், எரிட்ரிய ஆர்த்தடாக்ஸ், சீரோ மலங்கரா போன்ற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள் உள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2019, 14:50