ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் ஆசீர் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் ஆசீர் வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

வாழ்வுக்கு நிறைவையும், பொருளையும் வழங்கும் இயேசு

திருத்தந்தை : உலகம் வழங்கும் குறுக்கு வழிகள், இறைவனுக்குப் பதிலாக உலக இன்பங்களை முதன்மைப்படுத்த முயல்கின்றன

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இறைவனை முற்றிலுமாக நம்புவதை உள்ளடக்கியிருக்கும் நம் விசுவாசத்தின் ஆழமான அர்த்தம் குறித்து சிந்திக்க இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்தில், லூக்கா நற்செய்தியில், இயேசு கூறியுள்ள வாழ்வின் பேறுகள் குறித்து தன் மூவேளை செப உரையில் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மகிழ்ச்சிக்குரிய குறுக்கு வழிகளாக இன்றைய உலகம் முன்வைப்பவை குறித்த ஓர் எச்சரிக்கையையும் விடுத்தார்.

உலகம் வழங்கும் குறுக்கு வழிகள், இறைவன் வழங்கிய பத்துக்கட்டளைகளில் முதல் கட்டளைக்கு எதிராகச் செல்வதோடு, இறைவனுக்குப் பதிலாக உலக இன்பங்களை முதன்மைப்படுத்த முயல்கின்றன என்று கூறியத் திருத்தந்தை, உலகம் வழங்கும் குறுக்கு வழிகள், மனிதர்கள், எளிதாக பாவத்தில் விழுவதற்கே உதவுகின்றன என்றார்.

ஏழைகள், பசித்திருப்போர், அழுவோர், துன்புறுத்தப்படுவோர் ஆகியோர் பேறுபெற்றோர் என எடுத்துரைக்கும் இயேசு, இறைவன் ஒருவரே நம் வாழ்விற்கு முழுமையைத் தர முடியும் என்பதை இதில் வலியுறுத்திக் கூறியுள்ளார் என்பதை எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பேறுபெற்றோர் குறித்த தன் வார்த்தைகள் வழியாக, நம் கண்களைத் திறக்கும் இயேசு, வெளித்தோற்றங்களைக் கொண்டு மேலோட்டமாக நோக்காமல், நம் விசுவாசத்தின் துணைகொண்டு எதையும் அலசி ஆராயவேண்டும் என இங்கு கற்பிக்கிறார் என மேலும் கூறினார் திருத்தந்தை.

இறைவன் நமக்குத் தேவை என்பதை உணர்ந்து, இறைவனைப்போல், அதேவேளை இறைவனோடு இணைந்து, ஏழைகளின் அருகில் நாம் இருக்கும்போது, உண்மையான மகிழ்ச்சியை கண்டுகொள்வோம் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகப்போக்கிலிருந்து நமக்கு குணமளிக்கும் இயேசு, எது நம் வாழ்வுக்கு நிறைவையும், பொருளையும், மாண்பையும் தருமோ அதை வழங்க வருகிறார் என எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 February 2019, 12:45