தேடுதல்

Vatican News
100219ம் தேதி திருத்தந்தையின் மூவேளை செப உரைக்கு செவிமடுக்க வந்த விசுவாசிகள் 100219ம் தேதி திருத்தந்தையின் மூவேளை செப உரைக்கு செவிமடுக்க வந்த விசுவாசிகள்  (Vatican Media )

மனித வர்த்தகத்தால் துன்புறுவோருக்கு புனித பக்கீதாவின் பரிந்துரை

மனிதர்கள் சுரண்டப்படுவது மற்றும் அடிமைகளாக நடத்தப்படுவது குறித்து கண்டனக் குரலை எழுப்பும்போது, நம் அர்ப்பணத்தை செபத்தினால் பலப்படுத்த முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித வர்த்தகம் முடிவுக்கு வரவேண்டும் என, மனித வர்த்தகத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாவலரான புனித ஜோசப்பீன் பக்கீதா அவர்களின் பரிந்துரையை நாடுவோம் என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர்கள் சுரண்டப்படுவது மற்றும் அடிமைகளாக நடத்தப்படுவது குறித்து கண்டனக்குரலை எழுப்புவதில் அனைவரும் செயல்பட வேண்டும் என்ற அழைப்பையும் விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பொது அர்ப்பணத்தை செபத்தின் வழியாக பலப்படுத்த முடியும் என உரைத்தார்.

அடிமைத்தனம், மனித வர்த்தகம் ஆகியவற்றால் காயமடைந்தோர், அச்சுறுத்தப்பட்டோர், மற்றும், தவறாக நடத்தப்பட்டவர்களை இறைவனே விடுவிப்பாராக, அவர்களும் இயேசுவை தங்கள் முன்மாதிரிகையாக எடுத்துக்கொண்டு, தங்கள் விசுவாசத்தின் துணையுடன் தங்கள் காயங்களிலிருந்து குணமடைவார்களாக எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை.

மனித வர்த்தகத்திற்கு எதிராகப் போராடுவோருக்கு, குறிப்பாக, சில துறவு சபைகளுக்கு தன் நன்றியையும் வெளியிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக அரசுகளுக்கு விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தார்.

மனித வர்த்தகம் மற்றும் அடிமைத்தனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக புனித பக்கீதாவின் பரிந்துரையை வேண்டி விசுவாசிகளுடன் இணைந்து செபிக்கவும் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1869ம் ஆண்டு சூடானில் பிறந்த பக்கீதா அவர்கள், தன் 7ம் வயதிலேயே அடிமையாக விற்கப்பட்டு, பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார். இத்தாலிய அரசு அதிகாரி ஒருவரால் விடுதலை பெற்று, இத்தாலியின் கனோசியன் துறவு சபையில் சேர்ந்து துறவியானார்.

10 February 2019, 13:00