தேடுதல்

Fatebenefratelli சபையின் 69வது பொதுப் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு Fatebenefratelli சபையின் 69வது பொதுப் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு  

தேவையில் இருப்போரின் குரலுக்குச் செவிகொடுங்கள்

புனித இறை யோவான் மருத்துவர்கள் சபையின் 69வது பொதுப் பேரவையில் பங்குபெறும் பிரதிநிதிகளைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா – வத்திக்கான் செய்திகள்

நோயாளர் மற்றும் தேவையில் இருப்போருக்கு, இயேசுவின் பரிவன்பையும், இரக்கத்தையும் காட்டுமாறும், தனிப்பட்ட குறைகள், பிரச்சனைகள், இன்னல்கள் போன்றவற்றிலிருந்து வெளிவந்து, மற்றவரோடு தோழமையுணர்வில் இணைந்து நடக்குமாறும், புனித இறை யோவான் மருத்துவர்கள் சபையினரிடம் இவ்வெள்ளியன்று கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

Fatebenefratelli என அழைக்கப்படும், புனித இறை யோவான் மருத்துவர்கள் சபையின் 69வது பொதுப் பேரவையில் பங்குபெறும் ஏறத்தாழ நூறு பிரதிநிதிகளை, இவ்வெள்ளியன்று திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நற்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நல்ல சமாரியரின் செயலை எடுத்துக்காட்டாகக் குறிப்பிட்டார்.

மருத்துவ மறைப்பணிக்கு, பேரன்பும், பரிவன்பும், ஊக்கத்தை அளித்து, அர்த்தம் கொடுக்கின்றன எனவும், இப்பண்புகளே, இச்சபையினரின் ஆன்மீகத்தையும், குழு வாழ்வையும் வழிநடத்துகின்றன எனவும், திருத்தந்தை கூறினார்.

இச்சபையினர் தங்களின் அமைப்புமுறைகள் பற்றி தெளிந்து தேர்வு செய்யுமாறு கேட்டுக்கொண்ட திருத்தந்தை, அந்த அமைப்புமுறைகள், காயமுற்றவரைப் பராமரித்த நல்ல சமாரியரின் சாவடிகளாக அமைய வேண்டும் எனக் கூறினார்.

ஏழை நோயாளர் மீது சிறப்பு கவனம் செலுத்துவது உட்பட, சமுதாயத்தில் நலிந்தவர்களுக்கு நன்மைபயக்கும் சமாரியர் வலைஅமைப்புகளை உருவாக்குமாறும், அதன் வழியாக, அச்சபையினரின் இல்லங்கள் எப்போதும் உலகளாவிய இரக்கம்நிறை தோழமைக்குத் திறந்தவைகளாய், குழுக்களை எப்போதும் வரவேற்பதாய் விளங்கும் என்று திருத்தந்தை கூறினார்.

இளையோர் எதிர்நோக்குடன் வாழ வேண்டுமென்றும், வயதானவர்கள் கனவு காண்பதை ஒருபோதும் நிறுத்திவிடக் கூடாது என்றும், தான் விரும்புவதாக உரைத்த திருத்தந்தை, தனக்காகச் செபிக்க மறக்க வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார்.

புனித இறை யோவான் மருத்துவர்கள் சபை, இஸ்பெயின் நாட்டு பொதுநிலை விசுவாசியான புனித இறை யோவான் அவர்களால் 1572ம் ஆண்டில் நோயாளர், வறியோர் மற்றும் பாலியல் தொழிலாளர் பராமரிப்புக்காக ஆரம்பிக்கப்பட்டது. இன்று உலகெங்கும், இச்சபையின் அமைப்புகளில், 45 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றனர். 4,500க்கும் அதிகமான தன்னார்வலர்களும் இச்சபையினருக்கு உதவி செய்கின்றனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 February 2019, 14:53