கலிலேயோ அறக்கட்டளையின் உயர் மட்ட அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் கலிலேயோ அறக்கட்டளையின் உயர் மட்ட அதிகாரிகளுடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

கலிலேயோ அறக்கட்டளையினருடன் திருத்தந்தை

கலிலேயோ அறக்கட்டளை மேற்கொண்டு வரும் செயல் திட்டங்கள், திருஅவை, உலகளாவிய பார்வை கொண்டது என்பதை உணர்த்துகின்றன – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கலிலேயோ அறக்கட்டளை மேற்கொண்டு வரும் செயல் திட்டங்கள், திருஅவை, உலகளாவிய பார்வை கொண்டது என்பதை உணர்த்துகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த இவ்வறக்கட்டளையின் உயர் மட்ட அதிகாரிகளிடம் கூறினார்.

பொதுநிலையினராக இணைந்து வந்து, நற்செய்தியின் மீட்கும் செய்தியை உலகிற்குப் பறைசாற்ற, குறிப்பாக, வலுவிழந்த வறியோருக்குப் பறைசாற்ற முயலும் கலிலேயோ அறக்கட்டளையின் முயற்சிகளை தான் பாராட்டுவதாக திருத்தந்தை கூறினார்.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளவர்களை, இன்னும் சிறப்பாக, மனித வர்த்தகம் என்ற கொடுமையால் துன்புறுவோரைக் குறித்து உலகெங்கும் விழிப்புணர்வை உருவாக்கி வரும் கலிலேயோ அறக்கட்டளை, புனித ஜோசப்பின் பகித்தா (Josephine Bakhita) திருநாளன்று தன்னைச் சந்திக்க வந்திருப்பதை, இறைவனின் செயலாக தான் கருதுவதாக திருத்தந்தை கூறினார்.

புனித பகித்தா வாழ்வு, காயப்பட்டு கிடைக்கும் மனித உடலை, அதில் தெரியும் கிறிஸ்துவின் உடலை இவ்வுலகிற்கு உணர்த்துகிறது என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்தக் கொடுமைக்கு எதிராகப் போராட நாம் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.

புனித ஜோசப்பின் பகித்தாவின் பரிந்துரையால், கலிலேயோ அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் அனைவரும், தூய ஆவியாரின் வல்லமையால் நிரப்பப்பட்டு, மனிதர்களின் முழு விடுதலைக்கு உழைக்கவேண்டும் என்பதை, தன் ஆசீர் கலந்த வாழ்த்துக்களாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.

மேலும், பிப்ரவரி 8 இத்திங்களன்று, மனித வர்த்தகத்திற்கு எதிரான உலக நாள் கடைபிடிக்கப்படுவதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 2வது டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார்.

"மனித வர்த்தகம், மனித மாண்புக்கு எதிரான பெரும் எதிர் சக்தி. இந்த அவமானம் மிகுந்த கொடுமையைக் குறித்து விழிப்புணர்வு பெற்று, அதை எதிர்த்துப் போராட நம்மையே அர்ப்பணிப்போம்" என்ற சொற்களை, திருத்தந்தை, தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 February 2019, 14:47