தேடுதல்

கர்தினால் பேயா மையப்  பிரதிநிதிகளுடன் திருத்தந்தை கர்தினால் பேயா மையப் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை 

கர்தினால் அகுஸ்தீன் பேயா – 50ம் ஆண்டு நிறைவு

கர்தினால் அகுஸ்தீன் பேயா அவர்களின் பண்புகளை, 'புரிந்துகொள்ளுதல், நன்மைத்தனம், துணிவு' என்ற மூன்று சொற்களால் விவரிக்கலாம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கர்தினால் அகுஸ்தீன் பேயா (Augustin Bea) அவர்கள் ஆற்றிய பணிகளை நினைவுகூரும் அதே வேளையில், அப்பணிகளை அவர் ஆற்றிய விதத்தையும் நாம் நினைவுகூர வேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த 100க்கும் அதிகமான பன்னாட்டு பிரதிநிதிகளிடம் கூறினார்.

கர்தினால் பேயா அவர்கள், 1968ம் ஆண்டு இறையடி சேர்ந்ததன் 50ம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வேளையில், யூத மத ஆய்வுக்கென உருவாக்கப்பட்ட கர்தினால் பேயா மையத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், பிப்ரவரி 18, இவ்வியாழன் காலை திருத்தந்தையைச் சந்தித்தனர்.

கர்தினால் பேயாவின் பண்புகள்

இந்த மையத்தின் பிரதிநிதிகளிடம், கர்தினால் பேயா அவர்களின் வாழ்விலும், பணிகளிலும் விளங்கிய உரையாடல் பண்பை விளக்கிக் கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கர்தினால் பேயா அவர்கள், யூத மதத்தினருடன் கொண்டிருந்த ஆழந்த உறவை, சிறப்பாகக் குறிப்பிட்டுப் பேசினார்.

கர்தினால் பேயா அவர்கள், யூதர்களுடன் கொண்டிருந்த உறவைப் பாராட்டிய அனைத்துலக யூத காங்கிரஸ் என்ற அமைப்பின் தலைவர், நாகூம் கோல்டுமேன் (Nahum Goldmann) அவர்கள், கர்தினால் பேயா அவர்களிடம் காணப்பட்டப் பண்புகளை, 'புரிந்துகொள்ளுதல், நன்மைத்தனம், துணிவு' என்ற மூன்று சொற்களால் விவரித்ததை திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

உரையாடலுக்குத் தேவையான அம்சங்கள்

'புரிந்துகொள்ளுதல், நன்மைத்தனம், துணிவு' என்ற மூன்று பண்புகளும், நாம் மேற்கொள்ளும் அனைத்து உரையாடல் முயற்சிகளிலும், ஒன்றிப்பு முயற்சிகளிலும் வெளிப்பட வேண்டும் என்று திருத்தந்தை தன் உரையில் கேட்டுக்கொண்டார்.

கர்தினால் பேயா அவர்களின் 50ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் இம்மையத்தினர், கிறிஸ்தவ ஒன்றிப்பு, மற்றும் யூதர்களுடன் வளரவேண்டிய உறவு ஆகிய பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டுமென்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

கர்தினால் பேயா - வாழ்க்கை குறிப்புகள்

உரோம் நகரின் கிரிகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் விவிலியத் துறை பேராசிரியராகப் பணியாற்றிய இயேசு சபை அருள்பணியாளர் அகுஸ்தீன் பேயா அவர்களை, திருத்தந்தை புனித 23ம் ஜான், 1959ம் ஆண்டு கர்தினாலாக நியமித்தார்.

1960ம் ஆண்டு உருவாக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் முதல் தலைவராகப் பொறுப்பேற்ற கர்தினால் பேயா அவர்கள், 1962ம் ஆண்டு, திருத்தந்தை 23ம் ஜான் அவர்களால், ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார்.

இரண்டாம் வத்திக்கான் சங்கத்திலும், திருத்தந்தை 6ம் பவுல் அவர்களைத் தெரிவு செய்த கர்தினால்களின் 'கான்கிளேவ்' அவையிலும் பங்கேற்ற கர்தினால் அகுஸ்தீன் பேயா அவர்கள், 1968ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி இறையடி சேர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 February 2019, 15:36