தேடுதல்

Vatican News
திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரையின்போது - 200219 திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரையின்போது - 200219  (ANSA)

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை – வானகத்தின் குறைபாடற்ற அன்பு

மனித அன்பு காலைநேர மேகம் போலவும், கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறது, என்கிறார் இறைவாக்கினர் ஒசேயா

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

ஒவ்வோர் ஆண்டும், குளிர்காலத்தில், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெறும் வழக்கத்தையொட்டி, இவ்வாரமும், அவ்வரங்கம், திருப்பயணிகளால் நிரம்பியிருக்க, ‘எங்கள் வானகத் தந்தாய்’ என்ற செபம் குறித்த தன் புதன் மறைக்கல்வியுரைத் தொடரைத் துவக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மறையுரையின் ஆரம்பத்தில், இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து, “சீயோனோ, ‘ஆண்டவர் என்னைக் கைநெகிழ்ந்துவிட்டார்; என் தலைவர் என்னை மறந்து விட்டார்’ என்கிறாள். பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன். இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை நான் பொறித்து வைத்துள்ளேன்” (எசாயா, 49, 14-16). என்ற வரிகள் முதலில் வாசிக்கப்பட, ‘வானகத்திலுள்ள எம் தந்தாய்’ என்ற சொற்றொடருக்கான விளக்கம் திருத்தந்தையால் வழங்கப்பட்டது..

அன்பு சகோதர சகோதரிகளே, வானகத் தந்தாய் என்ற நம் செபம் குறித்த மறைக்கல்வித் தொடரில் இன்று, இறைவன் நம் தந்தை எனும் மறையுண்மைக்குள் நாம் நுழைவது குறித்து சிந்திப்போம். கடவுளை நம் தந்தையாக புரிந்துகொள்ள உதவியாக, நம் இவ்வுலக பெற்றோரைக் குறித்து நாம் எண்ணுவது இயல்பே. ஆனால், இந்நினைவை மேலும் தூய்மைப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. ஏனெனில், நம் பெற்றோரும், நாமும், முழு நிறைவானவர்கள் அல்ல.  இதனால், கடவுளை, தந்தை என எண்ணும்போது, இவ்வுலக பெற்றோரைக் குறித்து நாம் கொண்டிருக்கும் எண்ணங்களைத் தாண்டி நாம் செல்லவேண்டியுள்ளது. ஏனெனில், கடவுளின் அன்பு என்பது, வானகத்திலிருக்கும் தந்தையின் அன்பாகும். இருப்பினும், இவ்வுலக வாழ்வில், நாம் இந்த உன்னத அன்பை, முழுமையற்ற, குறைபாடுடைய ஒரு நிலையிலேயே அனுபவிக்கிறோம். நம் மனித அன்பு, காயமுற்ற நிலையில் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். உடைபடும் நிலையிலுள்ள, வலுவற்ற மனித அன்பு குறித்து இறைவாக்கினர் ஒசேயா அழகாக விவரித்துள்ளார். ‘உங்கள் அன்பு காலைநேர மேகம் போலவும், கதிரவனைக் கண்ட பனிபோலவும் மறைந்துபோகிறதே!’ (ஒசேயா 6:4) என்கிறார் இறைவாக்கினர்.

இதற்கு மாறாக, இறைவனின் அன்பு, முழுநிறைவானது. இவ்வுலகில் உள்ள எவரும் அன்புகூர முடியாத வகையில், அவர் நம்மை அன்பு கூர்கிறார். நாம் தேடுவது, இல்லாத ஒன்றை அல்ல, மாறாக, இறைவனை தந்தையாக அறிந்துகொள்வதற்காக நமக்கு விடப்பட்டுள்ள அழைப்பிற்கு வழங்கும் பதிலுரையே என்பதை, இறை அன்பிற்காக நாம் கொண்டிருக்கும் ஏக்கத்தில் உணர்கிறோம். ஆகவே, நாம் அஞ்சத் தேவையில்லை. இறைவன் நம்மீது கொண்டிருக்கும் பாசமிகு அன்பை எவரும் அகற்றிவிட முடியாது.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிப்ரவரி 22, இவ்வெள்ளியன்று, 'திருத்தூதர் புனித பேதுருவின் தலமைப்பீடத் திருவிழா' திருஅவையில் சிறப்பிக்கப்படவிருப்பதைக் குறித்து நினைவூட்டி, தனக்காக, தனிப்பட்ட விதத்தில் செபிக்குமாறு வேண்டினார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

20 February 2019, 12:19