தேடுதல்

Vatican News
புதன் மறைக்கல்வியுரையின்போது  திருத்தந்தை பிரான்சிஸ் - 130219 புதன் மறைக்கல்வியுரையின்போது திருத்தந்தை பிரான்சிஸ் - 130219  (ANSA)

மறைக்கல்வியுரை - 'நான்' என்ற சொல் இடம்பெறாத செபம்

இறைவனிடம் தனி ஓர் ஆளுக்காக வேண்டுவதாக இல்லாமல், மற்றவர் அனைவரின் சார்பாக விண்ணப்பிப்பதாக உள்ளது, இயேசு கற்றுத்தந்த செபம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

இத்தாலியில் குளிர்காலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்நாள்களில் சூரிய வெளிச்சம் அதிகமாக இருந்தாலும், குளிர் காற்றின் பாதிப்பும் அதிகமாக இருக்க, திருப்பயணிகளின் நலன் கருதி, திருத்தந்தையின் மறைக்கல்வி உரை, புனித திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கிலேயே இடம்பெற்று வருகிறது. அரங்கம் தன் கொள்ளளவையும் தாண்டி நிறைந்திருக்க, அங்கு குழுமியிருந்த திருப்பயணிகளிடம், ‘வானகத்திலுள்ள எம் தந்தாய்’ என்ற செபம் குறித்த தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

முதலில், லூக்கா நற்செய்தியின் 10ம் பிரிவில் காணப்படும் ஒரு பகுதி வாசிக்கப்பட்டது: “அந்நேரத்தில் இயேசு, தூய ஆவியால் பேருவகையடைந்து, ‘தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம், தந்தையே, இதுவே உமது திருவுளம்’ என்றார். ‘என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார். தந்தை யாரென்று மகனுக்குத் தெரியும்; மகன் யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறியார்’ என்று கூறினார்” என்ற பகுதி வாசிக்கப்பட்டபின், திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு துவங்கியது.

அன்பு சகோதர சகோதரிகளே, 'வானகத்திலுள்ள எம் தந்தாய்' என்ற செபம் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று, இயேசு நமக்குக் கற்பித்தவண்ணம் நாம் எவ்வாறு செபிப்பது என்பதை தொடர்ந்து கற்றுக்கொள்வோம். இறைவனுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும், நெருக்கமான நம் உள்மன ஆழத்தில் உருவாவதே, உண்மை செபமாகும். அன்புகூரும் இருவரின் கண்களில் தோன்றும் கணநேரப் பார்வை போன்ற வாய் வார்த்தைகளற்ற உரையாடல் பரிமாற்றம் அது. இருப்பினும், இவ்வாறான வழியில் ஒரு கிறிஸ்தவர் இவ்வுலகை மறந்து விடுவதில்லை, மாறாக, இவ்வுலகின் மக்களையும் அவர்களின் தேவைகளையும் செபத்திற்குள் கொணர்கிறார். இயேசு கற்பித்த 'வானகத்திலுள்ள எம் தந்தாய்' என்ற செபத்தில், 'நான்' என்ற சொல் இடம்பெறவில்லை என்பதை நாம் காண்கிறோம். 'உமது ஆட்சி வருக. உமது திருவுளம் நிறைவேறுக' என செபிக்கும்படியே இயேசு நமக்குச் சொல்லித் தருகிறார். இந்த செபத்தின் இரண்டாம் பகுதி,  'உமது' என்பதிலிருந்து கடந்து, 'எங்கள்' என்ற சொல் நோக்கிச் செல்வதை நாம் காண்கிறோம். 'இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்', 'நாங்கள் மன்னித்துள்ளதுபோல்', என்ற பன்மையை குறிக்கும் சொற்கள், கிறிஸ்தவர்கள், இறைவனிடம், தனி ஓர் ஆளுக்காக உணவைக் கேட்பதில்லை, மாறாக, மற்றவர்கள் அனைவரின் சார்பாக கேட்கின்றனர் என்பதைக் காட்டுகின்றது. நம் செபங்களில் நாம் மற்றவர்களின் அழுகுரலுக்கு நம் இதயங்களை திறக்கின்றோமா என சிந்திப்போம். நாம் அனவருமே இறைவனின் குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில், நாம் எவ்வாறு மற்றவர்களை அன்பு கூர்ந்தோம் என்பதை வைத்தே நாம் நம் இறுதி நாளில் தீர்ப்பிடப்படுவோம். நம் அன்பு, வெறும் உணர்ச்சிபூர்வமானதாக இல்லாமல், உறுதியும், ஆழமும், பரிவும், நிறைந்ததாக இருக்கவேண்டும். இயேசுவின் வார்த்தைகளிலும் இதைத்தான் காண்கிறோம். ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ (மத். 25:40).

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர், முதியோர், நோயாளர் மற்றும் புதுமணத் தம்பதியர் நோக்கி தன் எண்ணங்கள் செல்வதாகக் கூறினார். இவ்வியாழனன்று சிறப்பிக்கப்படும், புனிதர்கள் சிரில் மற்றும் மெத்தோடியஸின் திருவிழா பற்றியும் நினைவூட்டிய திருத்தந்தை, ஸ்லாவ் மக்களுக்கு நற்செய்தியை அறிவித்தவர்களாகவும், ஐரோப்பாவின் இணை பாதுகாவலர்களாகவும் விளங்கும் இவ்விரு புனிதர்களின் எடுத்துக்காட்டு, வாழ்வின் அனைத்துச் சூழல்களிலும் நாம், மற்றவர்களின் மனந்திரும்பலுக்கு, இயேசுவின் சீடர்களாகவும், மறைப்பணியாளர்களாகவும் செயல்பட உதவுவதாக, என்று கூறினார். நம் வாழ்வின் அடிப்படை விதியாக நற்செய்தி மாறும் வண்ணம், எந்த தியாகத்தையும் ஏற்கும் பலத்தை, இப்புனிதர்கள், இறைவன்மீது கொண்டிருந்த அன்பு நமக்கு அளிப்பதாக எனக் கூறினார்.

மறையுரையின் இறுதியில், தன் ஆசீரை வழங்குவதற்குமுன், அந்த ஆசீருக்கு தான் பயன்படுத்தவிருக்கும் திருப்பட்டையை ஓர் உயர்ந்த கலாச்சாரத்தின் பெண்கள் குழு இச்செவ்வாயன்று தனக்குப் பரிசாக வழங்கினர் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அத்திருப்பட்டையை அணிந்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

13 February 2019, 11:52