தேடுதல்

மூவேளை செப உரையின்போது திருத்தந்தை  24.02.19 மூவேளை செப உரையின்போது திருத்தந்தை 24.02.19 

பகைவரையும் அன்புகூரும் புதிய கலாச்சாரம் - திருத்தந்தை

எதிரியை அன்பு கூர்வது, அவரவர் விருப்பத்தைப் பொருத்து நிகழும் ஒரு செயல் அல்ல, மாறாக, அது ஓர் இறை கட்டளை – திருத்தந்தையின் மூவேளை செப உரை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

'எதிரிகளை மன்னித்தல்' என்ற பண்பு, கிறிஸ்தவ வாழ்வின் அடையாளமாகவும், மையமாகவும் உள்ளதென, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிப்ரவரி 24, ஞாயிறன்று வழங்கிய நண்பகல் மூவேளை செப உரையில் கூறினார்.

வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு, இஞ்ஞாயிறு வழங்கப்பட்ட நற்செய்தி வாசகங்களை மையப்படுத்தி, மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, எதிரியை அன்பு கூர்வது, அவரவர் விருப்பத்தைப் பொருத்து நிகழும் ஒரு செயல் அல்ல, மாறாக, அது ஓர் இறை கட்டளை என்று கூறினார்.

உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல

தனக்கெதிராக தீமை செய்தவருக்கு, அதே தீமையை செய்வதற்கு மனிதரிடம் காணப்படும் இயல்பான உணர்வை எவ்வாறு வெற்றிகொள்வது என்ற கேள்வியை எழுப்பியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், "உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவராய் இருங்கள்" (லூக்கா 6:36) என்று இயேசு கூறிய சொற்களை பதிலாக முன்வைத்தார்.

பகைவரையும் அன்புகூரும் புதிய கலாச்சாரம்

நமக்குத் தீமை செய்வோரின் மீது அன்பு கூர்வது, இவ்வுலகின் புதிய கலாச்சாரமாக, அதாவது, கருணையின் கலாச்சாரமாக மாறியுள்ளது என்று கூறியத் திருத்தந்தை, இந்தப் புதிய கலாச்சாரத்தின் நாயகர்களாக எண்ணற்ற மறைசாட்சிகள் உள்ளனர் என்பதையும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார்.

பகைவரையும் அன்புகூரும் வேளையில், தீமையை நன்மையால் வெல்லமுடியும் என்பதை நாம் உலகிற்குப் பறைசாற்றுபவர்களாக மாறுகிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் இறுதியில் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

24 February 2019, 13:00